ஸ்ரீரங்கம் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்: இன்று மாலை முதல் மூலஸ்தான ஸேவை
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி, நேற்று முழுவதும் ரத்துச் செய்யப்பட்ட மூலவர் ஸேவை, இன்று மாலை முதல் துவங்குகிறது. "பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் மூலவர் பெரிய பெருமாளின் திருமேனி, சுதையால் (சுண்ணாம்புக்காரை) செய்யப்பட்டது. இதனால், மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யும் வழக்கம் இல்லை.திருமேனி மீது வஸ்திரம், திருவாபரணங்கள் மட்டுமே சாத்தப்படும். பூ, மாலைகள் சாத்தப்படுவதில்லை. ஆண்டுக்கொரு முறை, அகில், சந்தனம், சாம்பிராணி உள்ளிட்ட வாசனாதி திரவியங்கள் பாராம்பரிய முறையில் காய்ச்சப்பட்டு, தைலம் தயாரிக்கப்படுகிறது.அதன் மூலம் மூலவரின் திருமேனிக்கு தைலக்காப்பு இடப்படுகிறது. இது, ஆனி திருமஞ்சனம், பெரிய திருமஞ்சனம், ஜேஷ்டாபிஷேகம் எனவும் அழைக்கப்படுகிறது. நேற்று காலை, ஸ்ரீரங்கத்தில் ஜேஷ்டாபிஷேக விழா துவங்கியது.காலை, 6 மணிக்கு, கருடாழ்வார் சன்னதியிலிருந்து, தங்கக்குடம், வெள்ளிக்குடங்கள் எடுக்கப்பட்டன. வழக்கமாக அம்மா மண்டபம் படித்துறையில் ஜேஷ்டாபிஷேகத்துக்காக புனித நீர் எடுப்பது வழக்கம். காவிரியாறு தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.இதனால், வடகாவிரி எனப்படும் கொள்ளிடம் ஆற்றில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கென அமைக்கப்பட்டுள்ள கிணற்றிலிருந்து புனித நீர் எடுக்கப்பட்டது. யானை ஆண்டாள் மீது தங்கக்குடமும், மற்றவர்கள் வெள்ளிக்குடமும் ஏந்தி மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.காலை, 9.15 மணிக்கு, திருமஞ்சன ஊர்வலம் பெரிய சன்னதியை அடைந்தது. 9.45 மணிக்கு, பெருமாளின் அங்கிகள், தங்க நகைககள் உள்ளிட்ட ஆபரணங்கள் தூய்மை செய்யும் பணி நடந்தது. மாலை, 4.30 மணிக்கு, அங்கிகள், ஆபரணங்கள் ஒப்படைக்கப்பட்டன.
கருவறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் துப்புரவுப்பணி நடந்தன. தைலக்காப்பையொட்டி, மூலவரின் திருமுகம் தவிர திருமேனியின் பிற பாகங்கள் திரையிட்டு மறைக்கப்பட்டன. இரவு, 10.30 மணிக்கு, மூலவருக்கு மங்கள ஆரத்தி நடந்தது.ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி, நேற்று முழுவதும் மூலவர் ஸேவை ரத்து செய்யப்பட்டது. இன்று மாலை, 4 மணி முதல், 6 மணி வரையிலும், மாலை, 6.45 மணி முதல், இரவு 9 மணி வரை, மூலவர் ஸேவைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
திருப்பாவடை: இன்று காலை, 7 மணிக்கு, திருப்பாவடை எனப்படும், பெருமளவு சாதம் வடிக்கப்பட்டு, தளிகை செய்யப்பட்டு, கருவறையின் முன்புற மண்டபத்தில் துணி விரித்து பரப்பி வைக்கப்படும். அதில், நெய், கீரை, மா, பலா, வாழை என முக்கனிகள் சேர்த்து பெரிய பெருமாளுக்கு அமுது செய்விக்கப்படுகிறது. அதன்பின் இந்த பிரசாதம் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும்.