மழை வேண்டி குற்றால நாதர் கோயிலில் 27ம் தேதி யாகம்
குற்றாலம்: குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் வரும் 27ம் தேதி மழை வேண்டி யாகம் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் மழை வேண்டி ஓதுவார்களை கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய 7ம் திருமறை பதிகம் ஓதுதல், மேகவர்சினி, அமிர்தவர்சினி, ஆனந்த பைரவி, ரூபகல்யாணி போன்ற ராகங்களுடன் வாத்தியங்கள் இசைக்க வேண்டும். சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு சீதலகும்பம் எனப்படும் தாராபாத்திரத்தில் நீர்விழச்செய்தல் போன்றவை நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல பருவமழை பெய்து நாடு செழித்திடும் வகையில் கோயில்களில் ருத்ர அபிஷேகம், வர்ண வேத மந்திர பாராயணம், காயத்ரி மந்திர பாராயணம் உள்ளிட்டவை குறிப்பிட்ட தேதிகளில் நடத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் குற்றாலநாதர் குழல்வாய்மொழி அம்பாள் கோயிலில் வரும் 27ம் தேதி மழை வேண்டி யாகம் நடக்கிறது. கோயிலில் இந்த யாகம் காலை 9 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.