மாங்கனி விழாவில் அமுது படையல்!
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழாவில், அமுதுபடைக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழாவை யொட்டி, கடந்த, 21ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. 22 ம் தேதி, பரமதத்தர் - காரைக்கால் அம்மையார், திருக்கல்யாண வைபவம் நடந்தது. மாங்கனி திருவிழா நேற்று முன் தினம் நடந்தது. இதில், சிவபெருமான் அடியார் வேடத்தில் காவி உடை, ருத்ராட்சம் அணிந்து, வீதி உலா வந்தார். அப்போது, பக்தர்கள் சுவாமிக்கு மாம்பழங்களை படையலிட்டும், மாங்கனிகளை இறைத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். அன்று இரவு, வீதி உலா வந்த பிச்சாண்டவரை, காரைக்கால் அம்மையார், எதிர் சென்று அழைத்து வந்து, இனிப்பு, பழங்கள் என, பல்வேறு உணவு வகைகளை, அமுதாக படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. புனிதவதியார், புஷ்ப பல்லக்கில், பாண்டிய நாடாகிய சித்தி விநாயகர் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.