சிவலோகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை ஒட்டி காலபைரவருக்கு சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், நேற்றுமுன்தினம் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதில், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், அரிசி மாவு போன்றவைகளால் அபிஷேக பூஜை செய்யப்பட்டது. பின், ரோஜா, எலுமிச்சை, வடை போன்ற மாலைகள் சாத்தப்பட்டது. தொடர்ந்து, சிவலோகநாதருக்கு முதல் பூஜையும், சிவலோகநாயகி, முருகர், நடராஜர் சிலைகளுக்கு பூஜையும், மாலை 6.30 மணிக்கு, கால பைரவருக்கு அர்ச்சனையும், தீபாராதனையும் நடந்தது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து வழிப்பட்டனர். மாதம் ஒரு முறை வரும் தேய்பிறை அஷ்டமியானது ஞாயிற்றுக்கிழமை வந்ததால், கூடுதல் சிறப்பு ஏற்பட்டது. இந்நாளில் காலபைரவரை வழிப்பட்டால், தீராதவினை எல்லாம் தீரும் என்பது ஐதீகம். அதனால், ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, வழிப்பட்டு, பிரசாதம் மற்றும் அன்னதானம் பெற்றுச்சென்றனர்.