உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் துவக்கம்!

குருவாயூர் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் துவக்கம்!

பாலக்காடு: குருவாயூர், கிருஷ்ணன் கோவிலுள்ள, 42 யானைகளுக்கான, ஒரு மாத புத்துணர்வு முகாம் துவங்கியது. கேரள மாநிலம், குருவாயூர் கோவிலில் உள்ள யானைகளுக்கு, ஆண்டுதோறும் ஜூலை மாதம், மூலிகை புத்துணர்வு முகாம் நடத்தப்படும். யானைகள் புத்துணர்வு பெறவும், நோய்களுக்கான சிகிச்சை தரும் நோக்கிலும், இம்முகாம் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான, 30 நாள் முகாமை, புன்னத்தூர் கோட்டை பகவதி கோவில் வளாகத்தில், திருச்சூர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி துவக்கி வைத்தார்; ஜூனியர் விஷ்ணு என்ற யானைக்கு, மூலிகை உணவு வழங்கினார். குருவாயூர் தேவஸ்தான செயலர், நிர்வாக உறுப்பினர், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்டோருடன், தேவஸ்தான கால்நடை அதிகாரியும் யானைகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர். இம்முகாமில், உடல் நலக்குறைவுள்ள யானைகளுக்கு, ஆயுர்வேதம் அல்லது அலோபதி மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. யானைகள் புத்துணர்வு பெறும் வகையில் அரிசி, சிறு பயறு, கொள்ளு, அஷ்டசூர்ணம், சவனப்பிரகாசம், மஞ்சள் தூள் மற்றும் நவதானியங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இதற்காக தேவஸ்தானம், 8 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !