உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூ.16 கோடி ஏகாம்பரேஸ்வரர் கோவில் சொத்து மீட்பு!

ரூ.16 கோடி ஏகாம்பரேஸ்வரர் கோவில் சொத்து மீட்பு!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 15.75 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை, ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து நேற்று அறநிலைய துறையினர் மீட்டனர். செங்கல்பட்டு, வ.உ.சி., தெருவில், பழமையான ஏகாம்பரேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, ராஜாஜி தெரு, ஜி.எஸ்.டி., சாலை, மகாதேவன் தெரு உட்பட பல்வேறு இடங்களில், சொத்துக்கள் உள்ளன. இதனை, கோவில் நிர்வாகத்தினர் அடிமனை வாடகைக்கு விட்டனர். ஆனால், அடிமனை பெற்றவர்களில் பலர், வாடகை செலுத்தாமல் இருந்தனர். இதனை செலுத்தும்படி, கோவில் செயல் அலுவலர் சார்பில், பல முறை" நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, பலர் வாடகை பாக்கியை செலுத்தினர்.

வாடகை பாக்கி: செங்கல்பட்டு, ஜி.எஸ்.டி., சாலை அருகில், 42,490 சதுரடி நிலத்தை (சர்வே எண்: 144 /1), அடிமனைக்கு பெற்று, திரையரங்கம் கட்டி நடத்தி வந்த திருமலை என்பவர், கடந்த 1989ம் ஆண்டு முதல், கோவில் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய, 75 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தவில்லை. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், வாடகை பாக்கி வசூலாகவில்லை.

மீட்கப்பட்டது: இதையடுத்து, அவரின் வாடகை உரிமையை ரத்து செய்ய, அறநிலைய சட்டப்பிரிவு 78ன்படி, வேலூர் இணை ஆணையர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், வாடகை பாக்கி செலுத்தாத, திருமலையை அங்கிருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, நேற்று காலை, 11:00 மணிக்கு, அறநிலையத் துறை காஞ்சிபுரம் உதவி ஆணையர் மோகனசுந்தரம் தலைமையில், செயல் அலுவலர் வீருபொம்மு, தக்கார் வேதமூர்த்தி, சரக ஆய்வர் அலமேலு ஆகியோர், அந்த நிலத்தை காவல் துறையினர் உதவியுடன் மீட்டு, சீல் வைத்தனர். இதுகுறித்து, அறநிலையத் துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம் கூறுகையில், ""கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு, பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாததால், ஆணையர் உத்தரவுப்படி நிலத்தை மீட்டுள்ளோம். இதன் மதிப்பு, 15.75 கோடி ரூபாய் ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், வாடகை பாக்கி, இதுவரை 25 லட்சம் ரூபாய் வ‹லிக்கப்பட்டுள்ளது. வாடகை செலுத்தாதவர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !