உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை மலைப்பாதை சீரமைப்புக்கு ரூ.10 கோடி தேவை!

திருமலை மலைப்பாதை சீரமைப்புக்கு ரூ.10 கோடி தேவை!

திருப்பதி திருமலை மலைப் பாதையில் சீரமைப்பு பணியை மேற்கொள்ள, 10 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மலைப்பாதையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க, இந்நடவடிக்கைக்கு தேவஸ்தானம் முன் வர வேண்டியது அவசியமாகிறது. திருமலை ஏழுமலையானை தரிசிக்கவும், அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லவும், 1944ல், முதல் மலைப்பாதை (தற்போது இறங்கும் வழி) அமைக்கப்பட்டது. இந்த பாதையில், 58 இடங்களில் கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில், ஆறு இடங்களில் உள்ள வளைவு அபாயகரமானவை என, பாதுகாப்புத் துறையால் வரையறுக்கப்பட்டுள்ளது.

சீரமைப்பு இல்லை: இதன் பின், 1975ல், இரண்டாவது மலைப்பாதை (தற்போது ஏறும் வழி) அமைக்கப்பட்டது. இருப்பினும், முதன் முதலில் அமைக்கப்பட்ட மலைப்பாதை, 70 ஆண்டை கடந்துள்ள நிலையில், இதில் உள்ள தடுப்புச் சுவர்களை மேம்படுத்தவோ, குறுகலாக உள்ள பகுதிகளை அகலப்படுத்தவோ, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வழியில் விபத்து ஏற்பட்டால், அந்த பகுதியில் மட்டும் தடுப்புச் சுவர் சீரமைக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்கள் மோதினாலே உடைந்துவிடும் நிலையில், தடுப்புச் சுவர் உள்ளதாக புகார் கூறப்படுகிறது. கடந்த மாதம் நடந்த ஜீப் விபத்தில், மூன்று பேர் பலியாயினர். இதன் பின், மலைப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கு, வேக கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. குறிப்பிட்ட நேரத்துக்கு முன் வந்தால், அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத்தை தவிர்க்க, மலைப் பாதையில், வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி, பின்னர் வேகமாக செல்கின்றனர். இப்படி, வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்படுவதும், விபத்துக்கு வழி வகுப்பதாக உள்ளது.

ரூ.10 கோடி தேவை: மலைப்பாதையில், தடுப்புச் சுவரை, மூன்று அடிக்கு மேல் உயர்த்த வேண்டும். மேலும், தடுப்புச் சுவருக்கு முன், கனமான அலுமினிய தடுப்பு வேலியை அமைத்தால், விபத்துகளை தடுக்க முடியும், என்று பாதுகாப்புத் துறை, தேவஸ்தானத்திடம் கூறியுள்ளது. இப்பணிகளுக்கு, 10 கோடி ரூபாய் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. தினசரி இரண்டு கோடி ரூபாய்க்கு மேல், உண்டியல் வருமானம் கிடைக்கும் நிலையில், இப்பணியை மேற்கொள்ள திருப்பதி தேவஸ்தானம் முன்வர வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !