உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் மனைகளில் குடியிருப்போர் உண்ணாவிரதம்

கோவில் மனைகளில் குடியிருப்போர் உண்ணாவிரதம்

சென்னை: கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு, வாடகை முறையை ரத்து செய்ய வேண்டும்; பட்டா வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்போர் சங்கத்தின் சார்பில், நேற்று, உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில், மாநிலம் முழுவதும் உள்ள, பல்வேறு கோவில் மனை குடியிருப்போர் நலச்சங்கங்கள் கலந்து கொண்டன.சென்னையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த உண்ணாவிரதத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர், தா.பாண்டியன், பார்வர்டு பிளாக் கட்சித்தலைவர் கதிரவன், அகில இந்திய இந்து மகா சபாவின் பொதுச்செயலர், ஜெயராஜ், சமாஜ் வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர், தாமோதரன், எம்.எல்.ஏ., சிவபுண்ணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். அவர்களது கோரிக்கைகள்: கோவில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு, பட்டா வழங்க வேண்டும், முந்தைய தி.மு.க., அரசு சதுர அடி கணக்கில், வாடகை நிர்ணயித்ததை ரத்து செய்து, முன்பிருந்த பகுதி முறையை மீண்டும், அமல்படுத்த வேண்டும். குடியிருப்பு பகுதியை, "வணிகம் என்று தவறாக வகைப்படுத்துவது நிறுத்த வேண்டும். ஸ்ரீரங்கம் உட்பட, பட்டா பெற்றுள்ள மனைகளை, "கோவில் நிலங்கள் என அறிவித்து, பறிக்கப்பட்ட மனைகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும். வாரிசுதாரர்களுக்கும், பகுதி மாற்றம் செய்து வாங்கியவர்களுக்கும், நிபந்தனையின்றி பெயர் மாற்றம் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகள் என, கூறி எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகளையும், அத்துமீறல்களையும் நிறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !