மதுபானம் படைத்து நேர்த்திக்கடன் நள்ளிரவில் நடந்த விசித்திர விழா
சின்னமனூர் : தேனி மாவட்டம், குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, உப தெய்வமான சோணை கருப்பசாமி கோயிலில் நடந்த பொங்கல் விழாவில், பக்தர்கள் நள்ளிரவில் கிடா வெட்டி, மதுபாட்டில்களை படைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். குச்சனூரில் பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழாவின், 4 வது சனி வாரம் முடிவடைந்துள்ள நிலையில், உப தெய்வமான சோணை கருப்ப சாமிக்கு, சிறப்பு செய்யும் பொங்கல் விழா நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்தது. சனீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சோணை கருப்பசாமியை தரிசித்து, தங்களது வேண்டுதல்களை முன்வைப்பர். வேண்டுதல் அடுத்த ஆண்டு திருவிழாவிற்குள் நிறை வேறும் என்பது ஐதீகம்.வேண்டுதல் நிறைவேறியவர்கள், அவரவர் தகுதிக்கு ஏற்ப, ஆட்டு கிடாக்கள், கோழிகள், மதுபாட்டில்களை கோயில் நிர்வாகத்திடம் வழங்குவர். இதன்படி, 10 முதல் 15 கிடாக்கள், 500 கோழிகள், 5000 மதுபாட்டில்கள் வரை படைக்கப்படுகின்றன. நேற்று நடந்த திருவிழாவில் பக்தர்கள் வழங்கிய ஆடு, கோழிகளை அறுத்து, அதன் உறுப்புகளையும், நள்ளிரவில், ஆயிரக்கணக்கான மது பாட்டில்களையும் கருப்பசாமி முன் படைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், மது பாட்டில்களை உடைத்து, குதிரை சிலையின் கீழ் உள்ள துவாரத்தில் ஊற்றினர். வெட்டப்பட்ட கிடா, கோழி களுடன், நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் நடந்தது.