உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பராசக்தியின் சொரூபமே திரவுபதி!

பராசக்தியின் சொரூபமே திரவுபதி!

திரவுபதி பாண்டவர்களின் பத்தினி என்று புராணம் கூறினாலும் உண்மையில் அவள், உலகத்தைக் காத்து ரட்சித்து அழிக்கும் பராசக்தி ஆவாள். பாரத வம்சம் என்ற பாண்டவ குலத்தின் சக்தியாக விளங்கிய பாஞ்சாலி, அன்னை பராசக்தியின் வடிவமாவாள். மகாபாரதத்தை ஆழ்ந்து நோக்கினால் அனைத்தையும் அழிப்பது அவளே என்பதை உணரலாம். ஆக்குவது, காப்பது, அழிப்பது என்ற இம்முத்தொழில்களையும் தன் முக்குணங்களான சத்வ, ரஜஸ், தமஸங்களால் நடத்துவது அன்னை பராசக்தியே. இம் மூன்று தத்துவங்களும் ஒன்று சேர்ந்தே திரவுபதி ஆயிற்று. மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பதினேழாம் நாள் யுத்தம் முடிந்து விட்டது. அன்று இரவு பாண்டவர்களும் கண்ணபிரானும் உணவருந்த உட்கார்ந்திருக்கின்றனர். அனைவருக்கும் வரிசையாக உணவு பரிமாறிக் கொண்டிருந்த திரவுபதி கண்ணபரமாத்மாவைக் கடைக் கண்ணால் நோக்கியதையும், அதற்குக் கண்ணன் பதிலுக்கு கண் மூலமே சமிக்ஞை செய்ததையும் அதன் பின் திரவுபதி ஒரு துளி நீரை கண்ணபிரான் முன் ஊற்றியதையும் மகா வீரன் பீமன் கண்டுவிட்டான்.

உடனே சந்தேகம் என்னும் கொடிய பேய் அவன் மனதில் புகுந்து விட்டது. ஐந்து புருஷர்கள் இருக்க ஆறாவதாக ஒருவர் மேல் திரவுபதி இஷ்டப் படுகிறாளே; இதென்ன சோதனை? இவளுக்கு என்ன ஆயிற்று? என்று எண்ணி திரவுபதி மீது அளவற்ற ஆத்திரமும் கோபமும் பீமனுக்கு ஏற்பட்டது. இதைக் கண்ணுற்ற கிருஷ்ண பரமாத்மாவுக்கு உடனே பீமனின் எண்ணம் தெரிந்து விட்டது. பீமனும் எதையும் மறைக்காமல் தன் மனதில் உள்ளதை கண்ணபிரானிடம் தெரிவித்தான். பீமன் கூறியதைக் கேட்டு கண்ணபிரான் வாய்விட்டுச் சிரித்தான். மகாவீர பீமா, நான் சொல்வதைக் கேள். திரவுபதி உன் மனைவி என்றும் பஞ்ச பாண்டவர்களாகிய உங்கள் அனைவர்க்கும் அவள் பத்தினி என்றும் தானே இது வரை நீ எண்ணி வந்திருக்கிறாய் அது தவறு? பராசக்தி தான் திரவுபதியாக வந்திருக்கிறாள். பத்தினியாக வந்த சக்தி வடிவம் அவள். அவளைக் கொண்டு தான் மாபெரும் மகாபாரதப் போரை இந்தக் குரு÷க்ஷத்திர பூமியில் நான் நடத்தி வருகிறேன். நான் வெறும் சாரதியாக, தேரோட்டியாக மட்டுமே இருக்கிறேன்.

இந்த நாடகம் அனைத்தையும் நடத்துபவள் அவளே! இதில் உனக்கு சந்தேகம் இருந்தால் இன்றிரவு நடுநிசியில் அவளது நடவடிக்கைகளை கவனித்துப் பார். அவள் யாரென்று உனக்குத் தெரிய வரும் என்றார் கண்ண பரமாத்மா. அன்றிரவு பீமன் பக்கத்தில் படுத்திருந்த திரவுபதி எழுந்து சுற்றிலும் நோக்கினாள். பீமன் ஆழ்ந்து உறங்குவதாக எண்ணி வெளியே சென்றாள். பீமனும் எழுந்து ஆவலுடன் அவளைப் பின் தொடர்ந்தான். அப்போது கண்ணபிரானும் வந்து பீமனுடன் சேர்ந்து கொண்டார். இரத்த வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கும் குரு÷க்ஷத்திரப் போர்க்களத்தில் அக்னி சொரூபமாய் ஆகாயத்திற்கும் பூமிக்குமாக மாபெரும் விஸ்வரூபப் பேருருவம் கொண்டு ஓர் உருவம் நிற்பதை பீமனுக்குக் கிருஷ்ண பரமாத்மா சுட்டிக் காட்டினார். பீமா, இவள் தான் உங்கள் பத்தினி திரவுபதி. என்றார். எதைக் கண்டும் சிறிதும் பயமறியாத மகாவீர பீமன், அவ்வுருவத்தைக் கண்டு பயந்து நடு நடுங்கிப் போனான். திக்பிரமை பிடித்தவன் போலானான். கிருஷ்ணா, கேசவா, என்ன இது? என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லையே!

எனக்கு ஒன்றுமே புரியவில்லையே? மறைக்காமல் உண்மையைக் கூறுங்கள்! என்று பீமன் மிகுந்த அச்சத்துடனும் பதட்டத்துடனும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்கி வேண்டிக் கேட்டுக் கொண்டான். கிருஷ்ண பரமாத்மா விளக்கினார். பீமா, இரவு உணவு அருந்தும் போது திரவுபதி என்னைக் கடைக் கண்ணால் நோக்கினாள் அல்லவா? பதிலுக்கு நான் சமிக்ஞை செய்தேன். உடனே அவள் ஒரு துளி நீரை என் முன் ஊற்றினாள். அதற்கென்ன அர்த்தம் தெரியுமா? இந்தப் பதினேழு நாட்களில் குரு÷க்ஷத்திரப் படுகளத்தில் நடந்த போரில் அநேகமாக எல்லாரையும் சம்ஹாரம் செய்து விட்டேன். லட்சோப லட்சம் பேர்களை அழித்து விட்டேன். நாளை நடைபெறும் போரில் கொடியவன் துரியோதனனையும் அழித்து விடுவேன். இந்தப் பஞ்ச பாண்டவர்கள் ஐவரையும் விட்டுவைப்பதா? இல்லை இவர்களையும் சேர்த்து சம்ஹாரம் செய்து விடவா என்று ஜாடையாக தேவி கேட்டாள்.

பாண்டவர்கள் ஐவரையும் காப்பாற்றுவதாக அன்றொரு நாள் சகாதேவனிடம் வாக்களித்திருக்கிறேன். எனவே பாண்டவர்கள் ஐவரையும் உயிருடன் விட்டுவிடு என்றேன். அதனைக் குறிப்பாக உணர்த்தவே நான் கண்களால் ஜாடை செய்தேன். அதன்படி செய்வதாக உணர்த்வே ஒரு துளி தண்ணீரை என்முன் ஊற்றினாள். தண்ணீர் விடுவது சத்தியம் செய்வதற்கு ஒப்பாகும். இதை நீ உணர முடியாததால் அவள் கற்புக்கு மாசு கற்பித்தாய். திரவுபதி, அவள் அக்னியில் பிறந்தவள். பூபாரம் தீர்க்கவே வந்தவள். போர்க்களத்தில் அவள் எடுத்த பேருருவம் பார்த்தாய் அல்லவா? அவளே பராசக்தி. அவளே அனைத்துமாய் இருப்பவள். அவள் திரும்பி வந்ததும் அவளை வணங்கி வரம் பெற்றுக்கொள் என்றார் கண்ணபரமாத்மா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !