திருப்பதி தேவஸ்தானம் ஸ்தம்பிப்பு!
திருப்பதி: தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தில், அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டதால், திருப்பதி தேவஸ்தானம் ஸ்தம்பித்துள்ளது. ஆந்திராவில், கடந்த, 15 நாட்களுக்கும் மேலாக, தனித் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது. இப்போராட்டத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலக ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர். இதனால், 120க்கும் மேற்பட்ட, தேவஸ்தான துறைகளின் பணி பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி மற்றும் திருமலையில், தேவஸ்தானம் சார்பில், 250 கோடி ரூபாய் செலவில், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஊழியர்கள் வராததால், இப்பணிகள் முடங்கியுள்ளன. திருப்பதியில் உள்ள, தேவஸ்தான தலைமை அலுவலகத்தில், ஊழியர்கள் வராததால், செயல் அதிகாரி கோபால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், நாள் முழுவதும் அலுவலகத்தில், இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 22 ஆயிரம் பேர்: தேவஸ்தானத்தின் பல்வேறு துறைகளில், 12 ஆயிரம் ஊழியர்கள் நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். தற்காலிகப் பணியாளர்களாக, 10 ஆயிரம் பேர் உள்ளனர். அனைவரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திருமலையில் மிக முக்கியப் பணிகளில் உள்ள ஊழியர்கள் மட்டும், தேவஸ்தான இலவச பேருந்து மூலம், வந்து செல்கின்றனர். பணி நேரம் முடிந்தவுடன், போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். கடந்த 1932ல், பொப்பிலி ராஜு, திருப்பதி தேவஸ்தானத்தை ஏற்படுத்தினார். அன்று முதல், 80 ஆண்டுகளாக, எந்த போராட்டத்திலும், ஊழியர்கள் ஈடுபட்டதில்லை. தேவஸ்தான ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையில், பிரச்னை ஏற்பட்டபோதும், பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறவில்லை. தற்போது நடைபெறும் போராட்டம், திருப்பதி கோவில் வரலாற்றில், முதல் போராட்டம் என்ற இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த, இரண்டு நாட்களாக, திருமலையில் பலத்த மழை பெய்வதால், பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. இன்று, தர்ம தரிசன பக்தர்கள், ஒரு மணி நேரத்தில், ஏழுமலையானை தரிசித்து சென்றனர். பக்தர்கள் வருகை குறைவு, ஊழியர்கள் போராட்டம் காரணமாக, ஏழுமலையான் கோவில், உண்டியல் காணிக்கை வருவாய் குறைந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, 1.42 கோடி ரூபாய் மட்டுமே வசூலானது.