இருக்கன்குடி கோயிலில் ஆடிவெள்ளி விழா
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், ஆடி கடைசி வெள்ளி விழா நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இவ்விழா, கடந்த ஆக., 9 ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியாக ஆக 16 காலை 10.30 மணிக்கு, அம்மனுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. முடிகாணிக்கை,பொங்கல் வைத்தல், ஆயிரங்கண் பானை எடுத்தல், கயிறு குத்தல், கண் மலர், கை, கால் உருவங்கள் மற்றும் நவதானியங்களை காணிக்கையாக செலுத்தி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பிற்பகல் 3 மணிக்கு, ரிஷப வாகனத்தில் அம்மன், வீதி உலா நடந்தது. விழாவை முன்னிட்டு, சாத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலியில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சாத்தூர் டி.எஸ்.பி., சின்னையா தலைமையில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை, கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, செயல் அலுவலர் தனபாலன், பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.