வரலட்சுமி நோன்பு கோவில்களில் பூஜை
ஈரோடு: வரலட்சுமி நோன்பு மற்றும் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, ஈரோட்டில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்கார, பூஜைகள் நடந்தது. ஆண்டுதோறும் வரலட்சுமி நோன்பு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டுக்கான வரலட்சுமி நோன்பு ஆக 16 கொண்டாடப்பட்டது. திருமணமான புதுமண பெண்கள் மற்றும் குடும்ப பெண்கள், தங்கள் கணவன் நீண்ட ஆயுள் பெற, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டார்கள். இதற்காக, பிரத்யோகமான முறையில் அம்மன் சிலைகளை வீட்டில் வைத்து, பூஜித்து, பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். வரலட்சுமி நோன்பு மற்றும் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், சிறப்பு வழிபாடு ஆக 16 நடந்தது. அதனொரு பகுதியாக ஈரோட்டில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில், பல கோவில்களில் அன்னதானம், கஞ்சி, பிரசாதம் வழங்கப்பட்டது. சில கோவிலில், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு, பூ, மஞ்சள் கிழங்கு போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது.