பென்னலூர் சிவன் கோவில் சீரமைக்கப்படுமா?
ADDED :4466 days ago
ஸ்ரீபெரும்புதூர்: பென்னலூரில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, சிவன் கோவில் சிதிலமடைந்துள்ளதால், சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்து உள்ள, பென்னலூர் கிராமத்தில், 1,700 பேர் வசிக்கின்றனர். இங்கு, நூறாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. போதிய பராமரிப்பில்லாத காரணத்தால், தற்போது கோவில் சுற்றுச்சுவர், கருவறை மண்டபம், வளாகத்தில் உள்ள நந்தி, அம்மன் சன்னிதிகள், நுழைவு வாயில் ஆகியவை சிதிலமடைந்து உள்ளன. இதே நிலை நீடித்தால், பழமையான இக்கோவில் முற்றிலும் சிதைந்து விடும் நிலை உள்ளது. எனவே, வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலை புனரமைத்து, வழிபாடு செய்ய, இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.