கிருஷ்ணஜெயந்திக்கும் நகை வாங்கலாம்!
கிருஷ்ணர் சிறையில் பிறந்த போதே பலவகை ஆபரணங்களுடன் தோன்றினார். அவரது தந்தை வசுதேவர், குழந்தையை ஆயர்பாடியிலுள்ள நந்தகோபர் வீட்டில் விட்டு வந்தார். அப்போது, ஆயர்குலப் பெண்கள் குழந்தையைப் பார்க்க பலவகை ஆபரணங்கள் அணிந்து வந்தனர். விஷ்ணு அலங்காரப் பிரியர். அவரைப் பார்க்க வந்தவர்களும் சகல அலங்காரத்துடன் வந்தனர். எனவே அட்சய திரிதியை, ஆடிப்பெருக்கு நாளில் நகை வாங்குவது போல, கிருஷ்ணஜெயந்தி நன்னாளிலும் நகை வாங்கி அணியலாம்.
கண்ணனும் வேலனும்: கண்ணன், கந்தன் இருவருமே தெய்வீகக் குழந்தைகள். தெய்வங்களே குழந்தைகளாகத் திகழும்போது கொண்டாட்டத்துக்குக்கு பஞ்சமில்லை. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். இந்த இரண்டு தெய்வங்களுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.
பகவத்கீதையை அருளிய பரந்தாமனை கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்கின்றன புராணங்கள். அவ்வண்ணமே பிரணவ உபதேசம் அருளிய முருகப்பெருமானை பரமகுரு, குருசுவாமி என்று அழைத்து மகிழ்கிறோம்.
ஆடும் மயிலில் முருகன் அசைந்து வருகிறான் என்றால், கண்ணன் மயில் பீலியைத் தலையில் அணிந்த வண்ணம் ஆடி வருகிறான்.
கிருஷ்ணன் பிறந்தது ஓரிடத்தில்; வளர்ந்தது வேறிடத்தில். தேவகி பாலனை யசோதைதானே வளர்த்தாள்! அதேபோன்று, பார்வதி புத்திரனாகிய வேலவனையும் கார்த்திகைப் பெண்கள்தானே வளர்த்தார்கள்!
குழல் ஊதி மனதெல்லாம் கொள்ளை கொள்கிறான் கோகுலக் கண்ணன். முருகக்கடவுளையும் சங்க காலத்தலைமை நூலான திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் குழலன், கேட்டான் என்றே குமரனை அழைத்து மகிழ்கிறார்.
கண்ணன் காதல் மன்னன். கந்தனும் தினைப்புனம் சென்று, குறவர் குடிசை நுழைந்து வள்ளி நாயகியாரிடம் புரிந்த லீலைகளைக் கந்தபுராணம் விவரிக்கிறது.
வேலெடுத்து வினைகளைத் தீர்க்கிறான் ஆறுமுகன். கண்ணன் கையிலும் வேல் இருக்கிறது. ஆண்டாள் திருப்பாவையில் வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி! எனப் பாடி மகிழ்கிறாள்.
தர்மத்தை நிலைநாட்ட, தீயவர்களை அழிக்க கண்ணபெருமான் போர்க்களம் கண்டார். கந்தபெருமானும் சூராதி அவுணர்களை அழித்து தேவர் உலகை வாழச் செய்தார். கீதையில் கிருஷ்ண பகவானே சேனைத் தலைவர்களிலே நான் குகப் பெருமானாக விளங்குகிறேன் என்று கூறி மகிழ்கிறார்.
வள்ளி- தெய்வானை தேவியர் இருமருங்கும் விளங்க முருகன் காட்சி தருவது போலவே பாமா, ருக்மிணி தேவியருடன் பகவான் கிருஷ்ணர் விளங்குகிறார்.
பாம்புத் தலைமேலே நடம் செய்யும் பாதத்தினைப் புகழ்வோம்! எனக் கண்ணனைப் போற்றும் பாரதியார், வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம் என்று முருகனைப் பாடுகிறார். ஆதிசங்கரரோ... சுப்ரமண்ய புஜங்கம், பஜகோவிந்தம் இரண்டும் பாடி கந்தன், கண்ணன் இருவரையும் வணங்குகிறார்.
மயிலும் ஆடி நீயும் ஆடி வரவேண்டும் என வேலனிடம் வேண்டுகோள் வைக்கும் அருணகிரிநாதர், எந்தை வருக! ரகுநாயக வருக! மைந்த வருக! என கண்ணனுக்கினிய கறுப்பு நிறக் குழந்தை கண்ணனையும் காதலித்து அழைக்கிறார்.
அப்போ இது என் வீடு இல்லையா: மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும் மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோமே! என்று திருப்பாவையில் அழகாகப் பாடுகிறாள் ஆண்டாள் நாச்சியார். இந்தப் பாடலில், கண்ணனின் புகழை பறைசாற்றிக் கொண்டே வந்த அவள், ஒரு இடத்தில் மட்டும், ஏலாப்பொய்கள் உரைப்பானை... என்று சாடி விட்டாள். ஆம்...இந்தக் கண்ணன் எண்ணிக்கையில் அடங்காத, நம்பமுடியாத பொய்களை எல்லாம் சொல்வான். இதை விளக்க அழகான கதை ஒன்றைச் சொல்வார்கள். கோகுலத்தில் கண்ணன் ஆய்ச்சியர் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடச் செல்வான். ஒருநாள், ஒரு ஆய்ச்சி வீட்டில் வசமாகச் சிக்கிக் கொண்டான். கண்ணனின் காதைத் திருகிய அவள், ஏனடா, பானையில் கையை விட்டாய், வெண்ணெய் இருக்கிறதா என பார்க்கத்தானே! உனக்குப் பிடித்த நெய்ச்சீடை இருக்கிறதா என தேடத்தானே! ஒருவேளை நெய் முறுக்கு இருக்குமென நம்பி வந்தாயோ! உனக்கு மட்டும் தானா! இல்லை.... வாலுப்பசங்களான உன் நண்பர்களுக்கும் சேர்த்து திருடவா? என்றெல்லாம் மிரட்டுகிறாள். அந்தக் கண்ணன் என்ன சாதாரணமானவனா? தவம் செய்த முனிவர்களாலேயே, அவனது செயலைப் புரிந்து கொள்ள முடியாதே! இந்த ஆய்ச்சியை ஏமாற்றுவதா அவனுக்கு பெரிய கலை! தாயே! இது என் வீடு என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன், என்று ஒரு போடு போட்டானே பார்க்கலாம். ஏய்! இதை என்னை நம்பச் சொல்கிறாயா? உண்மையைச் சொல், என்று மீண்டும் மிரட்டுகிறாள் அந்த ஆய்ச்சி. காதில்பிடி மேலும் இறுகுகிறது. அம்மா! பிருந்தாவனத்தில் நான் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன் இல்லையா! அதில், ஒரு கன்றுகுட்டியைக் காணவில்லை. ஒருவேளை, இந்த பானைக்குள் ஒளிந்திருக்கிறதோ என கையை விட்டு துழாவினேன், என்கிறான். இப்படி மழலை பொய்யால், நம்மை மகிழ்வித்தவன் சின்னக்கண்ணன். அதனால் தான் ஆண்டாள் அவனை ஏலாப்பொய்கள் உரைப்பானை என்று பாடினாளாம்.
உலகத்தை கண்டு பயப்படாதே! அது கிடக்குது சின்ன உருண்டை!
*இறைவன் ஒருவனே என்று எண்ணி, என்னை (கிருஷ்ணரை) நினைத்து தியானித்து, நெறிபிறழாமல் வாழ்பவர்களை பிறவிக்கடலில் இருந்து தூக்கி விடுவேன்.
*எல்லா உயிர்களையும் நேசித்து கருணை செய். அகந்தை எண்ணத்தை அடியோடு ஒழித்து விடு. இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கருது.
*விருப்பு வெறுப்பு இன்றி மனதையும் பிறஉறுப்புகளையும் கட்டுப்படுத்தி, தனக்குத் தானே விதியை வகுத்துக் கொண்டு நடக்கும் மனிதன் ஆறுதல் அடைவான்.
*உணர்ச்சிப்பூர்வமாக ஒன்றில் பற்று வைக்கும்போது தான், மனிதன் ஆசைவயப்படுகிறான். ஆசை நிறைவேறாத போது கோபம் உண்டாகிறது. கோபத்தால் புத்தி தடுமாற்றம் உண்டாகும். இதனால் அறிவு அழிந்து இழிநிலையை அடைகிறான்.
*உலகத்தார் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி கவலைப்படாதே. துன்பம் வந்தாலும் மனம் கலங்காதவனும், இன்பத்தில் நிதானத்தை இழக்காமலும், அச்சம்,கோபம் இவற்றுக்கு ஆளாகாமலும் இருப்பவனே உறுதியான உள்ளம் கொண்டவன்.
*விரதமிருந்தால் உணவை ஒதுக்குகிறான் மனிதன். ஆனாலும், உணவின் சுவையை அவன் நெஞ்சுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. பரம்பொருளை உணர்ந்தால் மட்டும் சுவை பற்றிய எண்ணம் மறையும்.
*ஏதுமறியாத மக்கள் அறியாமையால் ஆசைவயப்பட்டு தொழில் செய்கிறார்கள். ஆனால், அறிவுடையவர்களோ ஆசையை விடுத்து உலகின் நன்மை கருதி தொழில் செய்வர்.
*உலகில் எல்லாத் தொழில்களும் இயற்கையின் தூண்டுதலால் தான் நடக்கிறது. அகந்தை கொண்டவன் மட்டுமே தன்னால் நடப்பதாக எண்ணுகிறான்.
*கொழுந்து விட்டெரியும் நெருப்பு விறகுகளைக் கரியாக்குவது போல, ஞானம் என்னும் தீ, பாவ வினைகளைச் சாம்பலாக்கி விடும்.
*எப்போதும் சந்தேக புத்தியுடன் இருக்கும் மனிதனிடம் அக்கறையோ, அறிவோ இருப்பதில்லை. அவன் தன்னைத் தானே அழித்துக் கொள்வான்.
*செயலைச் சரிவரச் செய்து விட்டு, அதன் பலனை என்னிடம் ஒப்படைத்து விட்டு எவ்விதப் பற்றும் இல்லாமல் இருப்பவனை பாவம் ஒருபோதும் அணுகாது.
*உடம்பு, தலை, கழுத்து மூன்றையும் நேராக வைத்து அசையாமல் தியானத்தில் அமர்ந்து கொள். என்னிடம், உன் நெஞ்சத்தை அள்ளி கொடுத்து விடு. அப்போது தான் நிஜமான யோகியாக மாறுவாய்.
*வயிறு முட்டச் சாப்பிடுபவன், எப்போதும் பட்டினி கிடப்பவன், காலநேரமின்றித் தூங்குபவன், விடிய விடிய விழித்திருப்பவன் இவர்கள் யாருக்கும் யோகவாழ்வு கிடைக்காது.
*சாப்பாடு, செயல், தூக்கம், விழிப்பு எல்லாம் ஒரே சீராக இருப்பதே துன்பம் இல்லாமல் இருக்கச் சிறந்தவழி.
*பண்பட்ட மனமே குழப்பத்தை விடும். தன்னைத் தானே உணர்ந்து மகிழ்ச்சியில் திளைக்கும்.
*தன்னைப் போல எல்லா உயிர்களையும் எண்ணி வாழ்பவனே யோகி. அவனே உயர்ந்தவன்.
-கிருஷ்ணர்