உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேதார்நாத் கோவிலில் மீண்டும் வழிபாடு!

கேதார்நாத் கோவிலில் மீண்டும் வழிபாடு!

டேராடூன்: பேய்மழையால் பாதிக்கப்பட்ட கேதார் நாத் கோவிலில், செப்டம்பர், 11ம் தேதி வழிபாடு துவங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக, கோவிலைச் சுற்றி, மீட்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, 40 உறுப்பினர்கள் குழு, கேதார்நாத் போய் சேர்ந்துள்ளது.

பேய் மழை, பெருவெள்ளம்: கடந்த, ஜூன் மாதம், உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பெய்த பேய் மழையால், காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற புனித தலங்களில் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களை சுருட்டியது. வெள்ளத்திலிருந்து தப்பிக்க முடியாதபடி, நிலச்சரிவுகள் சரமாரியாக ஏற்பட்டதாலும், பக்தர்கள் வந்திருந்த வாகனங்கள், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாலும், தங்கியிருந்த அடுக்கு மாடி கட்டடங்கள், இடிந்து விழுந்ததாலும், ஒரு லட்சம் பேர் தத்தளித்தனர். மந்தாகினி ஆற்றின் கரையில் அமைந்துள்ள, கேதார்நாத் கோவிலைச் சுற்றியுள்ள இடிபாடுகளை சரி செய்தால்தான் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடியும். இதற்காக, உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த, 30 பொதுப் பணித்துறை ஊழியர்கள், வருவாய்த்துறையை சேர்ந்த, 10 ஊழியர்கள் அடங்கிய, 40 பேர் குழு, கேதார்நாத் போய் சேர்ந்துள்ளது. அடுத்த மாதம், 11ம் தேதி முதல், கேதார்நாத் கோவிலில் வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கோவிலையும், கோவிலைச் சுற்றியுள்ள இடங்களை சுத்தப்படுத்தும் பணியில், இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

தொடரும் மழை: இதற்கிடையில், உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் லேசான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மந்தாகினி ஆற்றை கடந்து, கேதார்நாத் கோவிலுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தற்போது இங்கு, இரும்பு கம்பிகளை கொண்டு தற்காலிக பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பொருட்கள், கேதார்நாத் போய் சேர்ந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !