உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாதமின்றி சாதகம் செய்த இசை கலைஞர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ் உருக்கம்

சாதமின்றி சாதகம் செய்த இசை கலைஞர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ் உருக்கம்

சென்னை: ""செம்பை வைத்தியநாத பாகவதரின் இசை நிகழ்ச்சியில், விருது பெற்ற கலைஞர்கள் எல்லோரும், சாதமின்றி சாதகம் செய்தவர்கள். அவர்கள் வழியமைத்துக் கொடுத்த பாதையில் தான், நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம், என, பிரபல கர்நாடக இசை கலைஞர், கே.ஜே.ஜேசுதாஸ் பேசினார். செம்பை வைத்தியநாத பாகவதர் இசைவிழா நேற்று, சென்னை, தி.நகரில் உள்ள, கிருஷ்ணகான சபையில், துவங்கியது. 80 வயதை தாண்டிய, பிரபல கர்நாடக இசை கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. குரல் பிரிவில், கிருஷ்ணமூர்த்தி, வெங்கட்ராமன்; வயலின் - அனந்தராமன்; மிருதங்கம் - மெட்ராஸ் கண்ணன்; தம்புரா - லட்சுமி நாராயணன்; நாதஸ்வரம் - ராஜண்ணா, தவில் - பொறையாறு வேணு பிள்ளை ; கொன்னக்கோல் - திருச்சி - தாயுமானவன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற அனைவரும், மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். பின், அவர்கள் பற்றிய முழுவிபரங்கள் தெரிவித்து, குருபூஜை செய்யப்பட்டது. விருது கேடயத்துடன், பொற்கிழியும் வழங்கப்பட்டது. இதில், கர்நாடக இசை கலைஞர், கே.ஜே.ஜேசுதாஸ் பேசுகையில், "" செம்பை வைத்தியநாத பாகவதரின் அனுக்கிரஹம் இருப்பதால் தான், இந்த விழா சாத்தியமாயிற்று. அவரின் பாதங்கள், எங்கள் தலையில் இருப்பதாலேயே, எங்களால் உயர்ந்த நிலைக்கு வரமுடிந்தது. விருது பெற்ற கலைஞர்கள் எல்லோரும், சாதமின்றி சாதகம் செய்தவர்கள். அவர்கள் வழியமைத்துக் கொடுத்த பாதையில் தான், நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம், என்றார். கர்நாடக இசை கலைஞர், டி.வி.கோபால கிருஷ்ணன் பேசுகையில், "" இன்று எங்களைப் போன்றவர்கள், வளமுடன் வாழ்வதற்கு, பெரியோர்களின் நல்லாசியே, முக்கிய காரணம். கர்நாடக இசை கலையில், இன்று வரை நிலைத்திருப்பதற்கு, கலைஞர்களின், ஓயாத உழைப்பே காரணம், என்றார். கர்நாடக இசை கலைஞர், ஜெயன் பேசுகையில், "" இன்றைய இளைய தலைமுறைக்கு, மூத்த கலைஞர்கள் பற்றிய அறிமுகம் தேவை. கலைஞர்களை கவுரவித்தது, எங்களால் தனிப்பட்ட முறையில் சாத்தியப்படவில்லை. எங்கள் குரு, செம்பை வைத்தியநாத பாகவதரின் ஆசியே காரணம். அந்த ஆசி, அடுத்த தலைமுறைக்கும் செல்ல வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !