பவானியம்மன் கோவிலில் மீனவர்கள் கோலாகலம்
ஊத்துக்கோட்டை: பவானியம்மன் கோவிலில், ஆறாவது வார ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மீனவர்கள் பெரியபாளையத்தில் குவிந்தனர். பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், ஆடி மாத விழா விசேஷமாக கொண்டாடப்படும். ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள், விழா நடைபெறும். நேற்று, ஆறாவது வார ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, நாகப்பட்டினம், சென்னை ராயபுரம், வேளாங்கண்ணி மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் பெரியபாளையத்தில் குவிந்தனர். மேலும், ஆந்திர மாநிலம், நாகலாபுரம், பிச்சாட்டூர், நகரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து லாரி, வேன் போன்ற வாகனங்களில் வேப்ப இலையை கட்டிக்கொண்டு பக்தர்கள் வந்தனர். சனிக்கிழமை இரவு கோவிலுக்கு வந்த பக்தர்கள், தங்குவதற்கு போதுமான வசதி இல்லாததால், ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக குடில்களில் தங்கினர். சில பக்தர்கள், வேப்பிலை ஆடை கட்டி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போலீசார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை, ஊத்துக்கோட்டையில் இருந்து சத்தியவேடு, திருவள்ளூர் வழியாக திருப்பி விட்டனர். ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., குமரவேல் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.