திருச்செந்தூர் கோவில் ஆவணித்திருவிழா: சுவாமி சிவப்பு சாத்தி வீதி உலா
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழாவில் நேற்று சுவாமி சிவப்பு சாத்தி கோலத்தில் உலா வந்தார். இன்று பச்சை சாத்தி கோலத்தில் அருள் பாலிக்கிறார். திருச்செந்தூர் சுப் பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் ஏராளமான திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு ஆவணித்திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (1ம் தேதி) ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து ஆறுமுகப் பெருமான் வெற்றி வேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு வாழ்வில் ஏற்றம் தரும் ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன் கட்டளை மண்டபத்தை வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 4.00 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி வீதி: உலா: இன்று (2-ம் தேதி) எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி சுவாமி எழுந்தருளி திரு வீதி வலம் வந்து மேலக்கோவில் வந்தடைகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று பகல் 12.00 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் வந்து சேர்கிறார். நாளை (3ம் தேதி) ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். தேரோட்டம்: திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 4-ம் தேதி காலை 6.00 மணிக்கு நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொ) அன்புமணி, அலுவலக கண்காணிப்பாளர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
காத்திருந்த சுவாமி:பக்தர்கள் பரிதவிப்பு: கோவிலில் உற்சவரான சண்முகர் உள்ளிட்ட சன்னதிகளுக்குபூஜை செய்யும் முறை தொடர்பாக இரண்டு சிவாச்சாரியார்களுக்கிடையே ஏற்கனவே பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் ஒரு தரப்பைச் சேர்ந்த சிவாச்சாரியார் பூஜை செய்யும் முறை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆணை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மற்ற சிவாச்சாரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை4.30 மணிக்குள் சுவாமி தங்கச்சப்பரத்தில் எழுந்தருள வேண்டும். ஆனால் சிவாச்சாரியார்களுக்கிடையேயான பிரச்னையால் சுவாமிக்கு சாத்த வேண்டிய வைரக்கிரீடம், வைரவேல் ஆபரணங்களை ஸ்தலத்தார்கள் யாரிடம் கொடுப்பதென்று திணறினர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உற்சவரான சண்முகருக்கு அலங்காரம் செய்யப்படாமல் இருந்தது. அதன்பிறகு கோவில் இணை ஆணையர் (பொ) அன்புமணி ஏற்கனவே முறைப்பார்த்து வந்தவர்களுக்கு உத்தரவு வழங்கினார். அதன்பிறகே சுவாமிக்கு அவசரமாக அலங்காரம் செய்யப்பட்டு, புறப்பாடு செய்து தீபாராதனை ஆகியது. மாலை 4.30 மணிக்கு ராகு காலம் துவங்குவதால் அதற்கு முன்பாக சுவாமி எழுந்தருளல் நடைபெறுமா என பக்தர்கள் மனது பரிதவித்தது.இந்த பிரச்னைக்கு முன்கூட்டியே முடிவெடுத்திருந்தால் வீணாக சுவாமியை காத்திருக்க வைத்திருக்க வேண்டாம்.