உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலசை தசரா திருவிழா: காளிவேடம் அணியும் பக்தர்கள் விரதம் துவங்கியது!

குலசை தசரா திருவிழா: காளிவேடம் அணியும் பக்தர்கள் விரதம் துவங்கியது!

உடன்குடி: குலசேகரன் பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் காளி வேடம் அணியும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இந்தியாவில் மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தை வகிக்கிறது. தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. இத்திருவிழாவை காண இந்தியா முழுவதும் இருந்து சுமார் பல லட்சம் பக்தர்கள் குவிவார்கள். பல்வேறு நோய்கள் மற்றும் கடன் பிரச்சனைகள் விலக வேண்டி அம்மனுக்கு நேர்த்தி கடனாக வேடம் அணிந்து காணிக்கை பிரித்து கோயில் உண்டியலில் சேர்ப்பார்கள்.மேலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாக்குமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சுமார் மூன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட தசரா குழுக்கள் உள்ளது. இந்த குழுக்கள் மேளம், கரகம் மற்றும் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சி நடத்துவார்கள். எனவே இந்த மூன்று மாவட்டத்திலும் தசரா திருவிழா என்றால் எங்கு பாõத்தாலும் வேடம் அணிந்த தசரா பக்தர்களே காட்சியளிப்பார்கள். தசரா திருவிழாவில் மிக முக்கியமாக கருதப்படும் வேடம் காளி வேடம் தான்.இந்த வேடம் அணிபவர்கள் கடுமையான விரதம் கடைபிடிக்க வேண்டும். தசரா திருவிழா வரும் அக்-5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.வரும் அக்-15ம் தேதி மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.காளி வேடம் அணிபவர்கள் தங்களது வசதிக்கேற்ப 60 நாட்கள்,30 நாட்கள்,15 நாட்கள் என விரதம் இருப்பார்கள். அவ்வாறு விரதம் இருக்கும் பக்தர்கள் கடலில் குளித்துவிட்டு கோயில் பூசாரியிடம் மாலை அணிந்து விரதத்தை துவங்குவார்கள். காலை, மாலை பழமும்,மதியம் மட்டும் பச்சரிசி சாதம் மற்றும் தாளிக்காத பருப்பு சாம்பார் பயன்படுத்துவார்கள். இரு முறை குளித்து தாங்கள் அணியும் சடை,கிரீடம்,சூலாயுதம் போன்றவற்றிற்கு பூஜை செய்வார்கள். குறிப்பாக கடுமையான பிரம்மச்சாரி விரதம் கடைபிடிக்க வேண்டும். எனவே மிக பயபக்தியுடன் உள்ள கட்டுப்பாடு உள்ளவர்கள் மட்டுமே காளி வேடம் அணிவார்கள்.தற்போது விரதம் மேற்கொண்டு வரும் காளி பக்தர்கள் சிலர் கோயிலிலே தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.கொடியேற்றம் நடந்தவுடன் வேடம் அணியும் பக்தர்கள் கோயில் காப்பு கட்டி காணிக்கை பிரிக்க துவங்குவார்கள். தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் ஊழியர்கள் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !