சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் ஆவணி திருவிழா தேரேட்டம்!
கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு தென்மாவட்டங்களில் புகழ் பெற்ற சாமிதோப்பு அய்யாவைகுண்டசாமி பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை ஆகிய மூன்று மாதங்களில் 11 நாட்கள் கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழாக்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆவணி திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது .இரண்டாம் நாள் திருவிழாமுதல்,10-ம் நாள் திருவிழா வரை தினமும் மாலை 6 மணிக்கு அய்யா பல்வேறு வாகனங்களில் பதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேரோட்டம்: 11-ம் நாள் விழாவான நேற்று (2-ம் தேதி) தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு பணிவிடையும், 11 மணியளவில் நாற்காலியில் வலம் வந்து தேருக்கு எழுந்தருளினார். மதியம் 12 மணிக்கு அய்யா அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ணதேரில் எழுந்தருளுகிறார். தேரோட்டத்தை பூஜிதகுரு பாலஜனாதிபதி தொடங்கிவைத்தார். பின்னர் ஆயிரகணக்கான பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அய்யா அரகர சிவசிவ அரகரா என்ற பக்திகோஷம் முழங்க நான்கு ரத வீதி வழியாக தேரை வடம் பிடித்து இழுத்தனர். வண்ண மலர்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேர் ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தேர் 3 மணியளவில் வடக்கு வாசல் அருகில் வந்த போது ஆயிரகணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பழம், பூ ,தேங்காய் என சுருள் வைத்து அய்யாவை வழிபட்டனர். மாலை 6மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. இரவு 9 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் தெருவீதி வலம் வருதலும். 11 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இன்று (3-ம் தேதி) அதிகாலை 6 மணிக்கு பணிவிடையும் தொடர்ந்து கொடியிறக்கமும் நடக்கிறது.திருவிழாநாட்களில் காலை 6மணிக்கு பணிவிடையும், மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பும், 8-ம் திருவிழா முதல் 11-ம் திருவிழாவரை தினமும் இரவு 8 மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை பூஜிதகுரு பாலஜனாதிபதி, பாலலோகாதிபதி, ராஜவேல், பையன்கிருஷ்னராஜ், பையன்நேமி, பையன் கிருஷ்னநாமமணி, பையன்செல்லவடிவு, வக்கீல் யுகேந்த், டாக்டர் வைகுந்த், லோக்.பாலபிரசாத் ஆகியோர் செய்திருந்தனர்.