உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் அன்னதானம்!

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் அன்னதானம்!

தஞ்சாவூர்: தஞ்சையில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், ஆவணி பிரம்மோற்ஸவ விழாவையொட்டி, பா.ஜ., வர்த்தக அணி சார்பில், ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் குறிப்பாக பெண்கள் அதிகளவில் வந்து, அம்மனை வழிபட்டு செல்கின்றனர். புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி பிரம்மோற்ஸவ விழா வெகுவிமரிசையாக நடத்தப்படும். அதன்படி, கடந்த மாதம் 16ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. கடந்த ஒன்றாம் தேதியன்று, மாரியம்மன் பூ பாவாடை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில், சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அதிகளவில் கோவிலில் திரண்டு, அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு கஞ்சி, நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தஞ்சை மாவட்ட பா.ஜ., வர்த்தக அணி சார்பில், அம்மன் பக்தர்கள் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை மாநில வக்கீல் பிரிவு இணை செயலாளர் முரளி கணேஷ் துவக்கி வைத்தார்.இதில், தஞ்சை மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் கண்ணன், செயலாளர் பாலா, மாநில மத நல்லிணக்க பிரிவு செயலாளர் பரமானந்தம், ஒன்றிய தலைவர் சந்திரன், நிர்வாகிகள் செல்வம், காளிமுத்து, கிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !