மின்னல் தாக்கி விழுந்த லூர்து அன்னை சிலைக்கு சிறப்பு வழிபாடு!
சேர்ந்தமரம்: சேர்ந்தமரம் அருகே இடி, மின்னல் தாக்கி சர்ச் கோபுரத்தில் இருந்து விழுந்த லூர்து அன்னை சிலை நின்ற நிலையில் சேதமின்றி இருந்தøதை கண்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகே தன்னூத்து கிராமத்தில் புனித அருளானந்தம் ஆலயம் உள்ளது. சுமார் 80 அடி உயர கோபுரத்தில் முதல் நிலையில் ஏசு நாதர் சிலையும், இரண்டாவது நிலையில் லூர்து அன்னை சிலையும், 3வது நிலையில் மிக்கேல்சம்பத் சிலையும் உச்சியில் சிலுவையும் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் சேர்ந்தமரம் பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பலத்த சப்தத்துடன் மின்னல் வெட்டியது. மின்னல் ஒளியை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். கோயில் நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ் மற்றும் நிர்வாகிகள் வந்து பார்த்தபோது கோபுரத்தின் நடுநிலையில் இருந்த லூர்து அன்னை சிலை அந்த இடத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சர்ச் வளாகத்திற்குள் பார்த்தபோது லூர்து அன்னை சிலை கோபுரத்தில் இருந்த மாதிரியே சிறிதும் சேதமின்றி, தரையில் நின்றதை கண்டு அதிசயத்துடன் பார்த்தனர். சிலையில் எந்தவிதமான கீறலோ, சேதமோ ஏற்படவில்லை என்பதை அறிந்தவுடன் ஊர் பொதுமக்கள் அனைவரும் கொட்டும் மழையில் நனைந்தபடி கூடி லூர்து அன்னையை வழிபட்டனர்.இந்த சம்பவத்தை கேள்விபட்டு சுற்று வட்டார கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து லூர்து அன்னை சிலையை பார்வையிட்டு, பரவசத்துடன் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டு வருகின்றனர்.