உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்து மத தகவல் களஞ்சியம்: அமெரிக்காவில் வெளியீடு

இந்து மத தகவல் களஞ்சியம்: அமெரிக்காவில் வெளியீடு

வாஷிங்டன்: இந்து சமயத்தின், பிரமாண்ட கலைக்களஞ்சியம், அமெரிக்காவில், வெளியிடப்பட்டது. இந்து சமயத்தின்  நம்பிக்கைகள், மத நெறிமுறைகள், தத்துவம் உட்பட, 7,000 தலைப்புகளில், இந்தக் கலைக்களஞ்சியம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.  ஏறக்குறைய, 1,000 அறிஞர்களால், கடந்த, 25 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்தது. மொத்தம், 11 தொகுப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ள  இந்தக் கலைக்களஞ்சியத்தில், இந்திய வரலாறு, நாகரிகம், மொழி, கட்டடக்கலை, இசை, நடனம், கலை, மருத்துவம், அறிவியல் மற்றும்  சமூக அமைப்புகள், மதம், பக்தி, இந்து பெண்ணின் கடமை என, பல்வேறு தலைப்புகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன், இந்து மரபுகள்  மற்றும் கலாசாரம் குறித்த, 1,000க்கும் மேற்பட்ட படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. தெற்கு கரோலினா பல்கலைக்கழக  வளாகத்தில் உள்ள, இந்திய கலாசார ஆய்வு மையத்தில் நடைபெற்ற விழாவில், ரிஷிகேஷ் பரமார்த்த நிகேதனின், சித்தானந்த் சரஸ்வதி  சுவாமியின் முன்னிலையில், இந்த கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது. இந்த தகவல் களஞ்சியத்தில், இந்து தர்மம்  மட்டுமல்லாமல், சீக்கிய, ஜைன, பவுத்த மதங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். இவ்விழாவில், சித்தானந்த் சரஸ்வதி சுவாமிகள்  பேசுகையில், இந்த தகவல் களஞ்சியத்தை தயாரிக்கும் பணியில், அமெரிக்க பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது; தேசத்தின் மிகப்பெரிய சொத்து ஆன்மிகம்; இதன் வழியாக  இன்று உலகம், மகிழ்ச்சியான வாழ்க்கையைதேடும், என்றார். இவ்விழாவில், சமூக சேவகர் அன்னா ஹசாரே, சவுத் கரோலினா கவர்னர்,  நிக்கி ஹாலே, அமெரிக்காவுக்கான, இந்திய தூதர் அஜித் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தகவல் களஞ்சியத்தின் தலைமை  ஆசிரியர் டாக்டர் கே.எல்.சேஷகிரி ராவ் மற்றும் மேலாண்மை ஆசிரியர் சாத்வி பகவதி சரஸ்வதி ஆகியோர், இந்தியாவில் இருந்து  வந்தவர்களை வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !