குன்றத்தில் மயில்களை காக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் இருக்கும் மயில்களை காப்பாற்ற அரசு காலம் தாழ்த்தாமல் காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறம் தென்பரங்குன்றத்தில் 300க்கும் மேற்பட்ட மயில்கள் உள்ளன. அபூர்வமான 3 வெள்ளை மயில்களும் உள்ளன. பக்தர்கள் மலையை சுற்றி வரும்போது, சோளம், கம்பு, பொரி ஆகியவற்றை மயில்களுக்கு உணவாக கொடுப்பர். மற்ற நேரங்களில் மயில்கள் புழு, பூச்சிகளை உண்டு வாழ்கின்றன.உணவு கிடைக்காத காலங்களில் அருகிலுள்ள வயல்களில் நெற்கதிர்களை சாப்பிடும். அப்பகுதி நிலங்கள் பிளாட்டுகளானதாலும், சமீபகாலமாக மழை இல்லாததாலும் அங்கு விவசாயம் முற்றிலும் நடக்கவில்லை. இதனால் உணவு தேடிச் செல்லும் மயில்கள் விபத்தில் சிக்குகின்றன. ஏற்கனவே 600 மயில்கள் வரை இருந்தன. தற்போது அவற்றின் எண்ணிக்கை குறைந்து விட்டது. மேலும் தெரு நாய்கள் மயில்களின் இருப்பிடத்திற்கு சென்று அவற்றின் முட்டைகளை சாப்பிடுகின்றன. இதனால் மயில்கள் இனப்பெருக்கம் தடைபடுகிறது. மயில்களுக்கான காப்பகத்தை அரசு விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் இருக்கிற மயில்களையாவது காப்பாற்ற முடியும்.