வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்!
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் விழாவையொட்டி, நேற்று நடந்த தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள், தேர் வடம்பிடித்து இழுத்தனர்.வத்திராயிருப்பு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது, முத்தாலம்மன் கோயில். மழைக்கு அதிபதியான முத்தாலம்மனுக்கு, இப்பகுதி மக்களால் விழா எடுத்து, மழைவேண்டி வழிபடுவதே முத்தாலம்மன் திருவிழாவாகும். அக்.,9ல் கலைவிழா துவங்கியது. தொடர்ந்து இயல், இசை, நாட்டியம், நாடகம் என, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இறுதி நாளான நேற்று, தேரோட்டம் நடந்தது. அதிகாலை 1 மணிக்கு அலங்காரத் தேரில் அம்மன் எழுந்தருளினார். பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். பலரும் ஆடு, கோழி களை பலியிட்டும், அரிதாரம் பூசியும், மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். தேரானது, முக்கிய வீதிகள் வழியாக, மதியம் 12.30 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் அம்மன், மேளதாளம் முழங்க, கோயிலுக்கு வந்தார். கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பெண்கள், மஞ்சள் நீர் செலுத்தியும், மண் பொம்மைகள் செலுத்தியும் வழிபட்டனர். மஞ்சள் நீராட்டு முடிந்து மாவிளக்கு வழிபாடு நடந்தது. அம்மன், முதல்நாள் இரவு தோன்றி, மறுநாள் இரவு மறைபவர். அதன்படி அம்மன் சிலை, ஆற்று நீரில் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. அதற்கு முன், அம்மனுக்கு, பிரியாவிடை கொடுத்து வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் கோயிலை மூன்று முறை வலம் வந்தார். அப்போது பக்தர்கள், குலவையிட்டும், பூக்களை தூவியும், அம்மனை வழியனுப்பி வைத்தனர்.