நாகூர் தர்காவில் பக்ரீத் தொழுகை!
நாகப்பட்டினம்: நாகை அருகே, நாகூர் தர்காவில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறப்பு தொழுகையில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதை வலியுறுத்தும் விதமாக, முஸ்லிம்களால் தியாகத் திருநாளாக கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை,நேற்று, சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாகூர், ஷாகுல் ஹமீத் பாதுஷா நாயகம் ஆண்டவர் தர்காவில், பரம்பரை டிரஸ்டி கலிபா மஸ்தான் சாகிப், "துவா ஓதிய பின் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகூர் சில்லடி தர்கா பகுதியில், சில்லடி சாகிப் தலைமையில், சிறப்பு தொழுகை நடந்தது. நாகை யாகூசைன் பள்ளி, மோர்சா பள்ளி, சாகுல் ஹமீது, புதுப்பள்ளி உட்பட, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில், நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று தொழுகை நடத்திய பின், ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டனர்.