உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் பங்கேற்பு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர்: தி.பூண்டி, தஞ்சை பகுதிகளிலுள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜைகள், நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். தஞ்சை பெரியகோவிலில் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷங்கள் வெகு விமரிசையாக நடக்கும். ஓராண்டில், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் என்பது அரிது என்பதால், அன்றைய தின சிறப்பு பூஜையில் மட்டும், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்பர். நடப்பாண்டில் இதுவரை, 3 சனிப்பிரதோஷ வழிபாடு நடந்துள்ளது. வரும் டிச., மாதம் நிறைவுக்குள், இன்னும், 2 சனி பிரதோஷ வழிபாடு நடக்கவுள்ளது. சனிக்கிழமை தவிர, மற்ற கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாட்டில், பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்படும். பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது. இதில் பாலாபிஷேகம், மஞ்சள், தயிர், இளநீர் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்வித்து, தீபாராதனை காண்பித்து, சிறப்பு பூஜைகள், 2 மணி நேரம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். திருத்துறைப்பூண்டி: பிறவி மருந்தீஸர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது. தொடர்ந்து தீபாராதனைக்கு பின் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் எழுந்தருளி, பலி போட்டு பிரகாரம் வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்தனர். ஏற்பாட்டை கோவில் அதிகாரிகள், அலுவலர்கள் செய்திருந்தனர். இதேபோல, திருத்துறைப்பூண்டி சிங்களாந்தி அமிர்தவள்ளிநாயகி உடனுறை மணிகண்டேஸ்வரர் ஸ்வாமி கோவில், கள்ளிக்குடி நாகநாதசாமி ஸ்வாமி கோவில், நெடும்பலம் காசிவிஸ்வநாதர் ஸ்வாமி கோவில், பேளூர் ஸ்வர்ணபுரீஸ்வரர் ஸ்வாமி கோவில், தண்டலச்சேரி நீதிநெறிநாதர் ஸ்வாமி கோவில், கச்சனம் கைக்கினேஸ்வரர் ஸ்வாமி கோவில், திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இவற்றில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !