உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் தெருக்களில் போலீஸ் அமைத்த தடுப்பு சுவர்: மக்கள் அவதி!

ராமேஸ்வரம் தெருக்களில் போலீஸ் அமைத்த தடுப்பு சுவர்: மக்கள் அவதி!

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் தெருக்களில், போலீசார் தடுப்புச்சுவர் அமைத்து பாதையை மறித்ததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ராமேஸ்வரம் கோயில் பாதுகாப்பு கருதி, நான்கு ரதவீதிகளில் கார், ஆட்டோ செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால், "கார் பார்க்கிங் பகுதியில் இருந்து பக்தர்கள் நடந்தும், பேட்டரி கார் மூலம் கோயிலுக்கு வந்தனர். இந்நிலையில் உள்ளூர் மக்கள், டூவீலரில் செல்பவர்கள் கோயில் நான்கு ரதவீதி வழியாக செல்ல முடியாதபடி, ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கும் நகராட்சி 20, 21வது வார்டில் உள்ள களவாய் தெரு, மறவர் தெரு, மண்டித்தெரு, கிழக்கு தெரு, இத்தி தெரு, அக்னி தீர்த்த கரையில் உள்ள நகராட்சி ரோட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவில், போலீசார் 2 அடி உயர தடுப்பு சுவர் எழுப்பினர். இதனால், அப்பகுதி மக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் தவித்தனர். நகராட்சி குப்பை வண்டி, தெருக்களில் செல்ல முடியவில்லை. தடுப்புச்சுவர் எழுப்பியதை கண்டித்து, மக்கள், நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர். ராமேஸ்வரம் டி.எஸ்.பி., மோகன்ராஜ் கூறியதாவது: கிழக்கு தெரு, களவாய் தெரு உள்ளிட்ட 4 பாதைகள் வழியாக டூவீலர் வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, சிமென்ட் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் யாருக்கும் பாதிப்பு இருக்காது, என்றார். நகராட்சி கமிஷனர் கண்ணன் கூறியதாவது: நகராட்சி அனுமதியின்றி, சாலையில், தெருக்களில் தடுப்புச்சுவர் அமைத்ததால், உள்ளூர் மக்கள், பக்தர்கள் சிரமம் அடைவதுடன், குப்பை அள்ளும் வாகனங்களும் செல்ல முடியவில்லை. தடுப்பு சுவர், உடனடியாக அகற்றப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !