உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை காந்திமதி அம்பாள் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து நேற்று காலை மற்றும் இரவு காந்திமதி அம்பாள் நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா நடந்தது. இன்று முதல் 30ம் தேதி வரை தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் காந்திமதி அம்பாள் சன்னதியிலிருந்து காந்திமதி அம்பாள் டவுண் நான்கு ரத வீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.29ம் தேதி இரவு 1 மணிக்கு காந்திமதி அம்மன் சன்னதியிலிருந்து தங்க முலாம் சப்பரத்தில் புறப்பட்டு கீழ ரதவீதி, தெற்கு ரத வீதி, பேட்டை ரோடு வழியாக அதிகாலை 5 மணிக்கு காமாட்சி அம்மன் கோயிலை சென்றடையவுள்ளது. 30ம் தேதி காலை கம்பைநதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. மாலை சுவாமி, அம்பாள் நெல்லை டவுண் நான்கு வீதிகளிலும் வீதி உலா நடக்கிறது. 31ம் தேதி காலை அம்பாள் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவ விழா நடக்கிறது. 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் நான்கு ரதவீதிகளிலும் பட்டின பிரவேசம் வீதி உலா நடக்கிறது. 31ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை அம்பாள் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில்அம்பாள் ஊஞ்சல் விழாவும், 3ம் தேதி இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் வீதி உலா நடக்கிறது.பக்தி கலை நிகழ்ச்சி : திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு அம்மன் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் நால்வர் பொற்றான் எம் உயிர் துணையே என்ற தலைப்பில் முத்தையா சிவாவின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு சாதகப் பெண் பிள்ளை என்ற தலைப்பில்சிவகாந்தியின் பக்தி இன்னிசையும், 22ம் தேதி இரவு அன்னையின் எல்லையற்ற விரிந்த பறந்த அன்பின் மகிமையே அருள் என்ற தலைப்பில் ராமச்சந்திரனின் பக்திசொற்பொழிவும், 23ம் தேதி இரவு அன்பு செய்த அற்புதம் என்ற தலைப்பில் வி.கே.புரம் திருவாவடுதுறை ஆதின சமயபரப்புநர் கோமதி திருநாவுக்கரசின் பக்தி சொற்பொழிவும் நடக்கிறது. 24ம் தேதி இரவு காந்திமதி அம்மன் பெருமை என்ற தலைப்பில் திருமலையின் பக்தி சொற்பொழிவும், 25ம் தேதி இரவு வேணுவனநாதர் என்ற தலைப்பில் சந்தனமாரி செய்தலை மணியனின் சமய சொற்பொழிவும் நடக்கிறது. 26ம் தேதி இரவு அடியார் பெருமை என்ற தலைப்பில் முத்துகுமாரின் பக்தி சொற்பொழிவும், 27ம் தேதி இரவு பட்டுராஜகோபால் மற்றும் மாணவர்களின் பக்தி இன்னிசையும், 28ம் தேதி முழு முதற்கடவுள் சிவபெருமான் என்ற தலைப்பில் திருபாகம்பாள் மாதர் கழக செயலர் விலமா சுப்பிரமணியனின் பக்தி சொற்பொழிவும் நடக்கிறது. 29ம் தேதி இரவு ராம நாட்டியாலயா பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நாராயணன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !