திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நவ.3ல் துவக்கம்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில், நவம்பர், 3ம் தேதி, கந்த சஷ்டி விழா துவங்குகிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில், அடுத்த மாதம், 3ம் தேதி அதிகாலை, 1:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு சுவாமிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது. அங்கு, எழுந்தருளும், ஜெயந்தி நாதர், வள்ளி, தெய்வானைக்கு, சிறப்பு பூஜை நடக்கிறது. பின், தங்கச் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி, வீரவாள் வகுப்பு, வேல வகுப்பு பாடல்களுடன், சண்முக விலாச மண்டபத்தில், பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அதன்பின், சுவாமி கோயிலுக்கு திரும்புகிறார். இதன்மூலம் கந்த சஷ்டி விழா துவங்குகிறது. விழாவின் நிறைவாக அடுத்த மாதம், 8ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கவுள்ளது. கந்த சஷ்டி விழாவுக்கு, தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் வரவுள்ள பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.