பழநி கோயிலில் 3 கடைகளை அகற்ற 300 பேர்: கிரிவீதியில் தொடரும் ஆக்கிரமிப்புகள்!
பழநி: பழநி மலைக்கோயில் படிப்பாதை கடைகளை முழுவதுமாக அகற்றுவதாக கூறிய கோயில் நிர்வாகம், மூன்று கடைகள் மட்டுமே அகற்றி சொதப்பியது. பழநி கோயில் படிப்பாதை, யானைப்பாதையில் கடைவைத்துள்ளவர்கள், பக்தர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து இடையூறு செய்தனர். சமீபத்தில், ஒரு கடையில் அசைவ சாப்பாடு, மதுபாட்டில் இருந்தது. இதுகுறித்து புகாரில், படிப்பாதை, யானைப்பாதையில் அனுமதிக்கப்பட்ட 13 கடைகளையும் அகற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.
குழப்பம்: இதில், 13 கடைக்காரர்களில் 10 கடைக்காரர்கள் நீதிமன்றத்தில் தடை பெற்றுஉள்ளதாலும், இதுகுறித்து இந்து அறநிலையத்துறை செயலாளரிடமிருந்து உத்தரவு கிடைக்காத காரணத்தாலும், அவற்றை அகற்றுவது குறித்த முடிவில் குழப்பம் ஏற்பட்டது. இறுதியாக, மேல்முறையீடு செய்யாத மூன்று கடைகளை அகற்றுவது, மற்ற 10 கடைகளில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி 9,10,13 எண் கடைகள் அகற்றப்பட்டன.
3 கடைக்கு 300 பேர்: அனைத்து கடைகளும் அகற்றப்படவுள்ளதால், காலை 8 மணி முதல், திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ், முன்னிலையில், பழநி கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், மற்றும் ஆர்.டி.ஓ., சுந்தர்ராஜ், தாசில்தார் பாலசுப்ரமணியம் வருவாய் அலுவலர்கள், நகராட்சி ஆணையர் சரவணக்குமார், அலுவலர்கள், கோயில் ஊழியர்கள், பாதுகாவலர்கள் என 300க்கு மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர். மூன்று கடைகள் மட்டும் அகற்றும், கோயில் நிர்வாகம் முடிவுகாரணமாக, பிற துறை அலுவலர்கள், போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். கடைகள் முழுவதையும் அகற்றினால் தான் பக்தர்களுக்கு பயனளிக்கும் என்றும் தெரிவித்தனர். கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் கூறுகையில், ""கோர்ட் நடவடிக்கை காரணமாக கடைகளை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்து அறநிலைத்துறை செயலர், ஆணையரிடம் அனுமதி கேட்டு பின்னர் அகற்றப்படும், என்றார்.
கிரிவீதியில் தொடரும் ஆக்கிரமிப்புகள்: பழநி கிரிவீதியில் தொடர்ந்து ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்துவருகிறது. பழநி கிரிவீதி பாத விநாயகர் கோயில் அருகே, பொருட்களை வாங்குமாறு, சிறு வியாபாரிகள், பக்தர்களை தொந்தரவு செய்கின்றனர். மேலும், பழக்கடை, பேன்சி பொருட்களுடன் தள்ளுவண்டிகள், சிறுகூடாரக்கடைகள் ரோட்டை ஆக்கிரமித்துள்ளதால், பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். கோயில் சார்பில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டாலும், தொடர் கண்காணிப்பு இல்லாததால், ஓரிரு நாட்களில், அதே இடத்தில் கடைகள் மீண்டும் உருவாகின்றது. அடுத்த மாதம் கந்த சஷ்டி, மற்றும் கார்த்திகையை முன்னிட்டு ஐயப்ப, முருகபக்தர்கள் வருகை அதிகரிக்கும், அதற்கு முன்னதாக, கிரிவீதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை, நிரந்தரமாக அகற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.