கேட்பாரில்லாமல் அழியும் வரலாற்று அடையாளங்கள்!
உடுமலை: பொள்ளாச்சி பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையையும், பல்வேறு ஆறுகளையும் ஆதாரமாகக்கொண்டு வளர்ந்த நாகரீகங்களின் ஆதாரமாக வரலாற்றுச் சின்னங்கள் தொடர்ந்து இப்பகுதியில், கிடைத்து வருகின்றன. ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாமல், பெருங்கற்காலம் உட்பட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச் சின்னங்களை அதன் முக்கியத்துவம் தெரியாமல், அழிப்பது தொடர்கதையாக உள்ளது. இது வரலாற்று ஆய்வாளர்களை வேதனைக்குள்ளாக்குகிறது. வெளிநாடுகளில் நூறு ஆண்டுகள் பழமையான கட்டடங்களை கூட பாதுகாத்து வரும் நிலையில், இரும்புப்பயன்பாட்டிற்கு வரும் முன்பே கற்களால் கருவிகளை உருவாக்கி, பயன்படுத்திய நாகரிகத்தின் ஆதாரச்சின்னங்கள் பல்வேறு காரணங்களால் அழிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.உடுமலைப்பகுதியில், கடந்த சில ஆண்டுகளில், பெருங்கற்காலத்தை பல்வேறு வரலாற்று சின்னங்கள் ஆய்வாளர்களால் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அமராவதி ஆற்றுப்படுகையில், மண்ணில் புதைந்து கிடந்த விண்ணகர பெருமாள் கோவில், கண்ணாடி அணிகலன் உற்பத்திக்கான கருவிகள், அழகிய உருவங்கள் வரையப்பட்ட மண்பாண்டங்கள், கோவில் அமைப்பு, தானங்கள், நீதி ஆகியவை குறித்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. உப்பாறு படுகை எனப்படும் குடிமங்கலம் பகுதியில், கல் திட்டைகள், கல் பதுக்கைகள் எனப்படும், அக்கால வீரர்களுக்கான சமாதி அமைப்பு, அவர்கள் பயன்படுத்தி பொருட்களை சமாதியில் வைக்க பயன்படுத்தப்பட்ட மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழி ஆகியவை தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொங்கல்நகரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மண்பாண்டங்கள் மேற்பரப்பு ஆய்விலேயே அதிகளவு கிடைக்கின்றன. இம்மண்பாண்டங்கள் அப்பகுதியில், மண்ணால் ஆன பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டதையும், உட்பூச்சுக்கு பல்வேறு வண்ணங்களை பயன்படுத்தி உருவங்கள் வரையப்பட்டதையும் வெளிப்படுத்துகின்றன.ஆனால், கடந்த சில ஆண்டுகள் முன் வரை இம்மண்பாண்டங்கள் அதிகளவு அப்பகுதியை சேர்ந்த மக்களால், சேதப்படுத்தப்பட்டு உடைக்கப்பட்டுள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு, மக்களுக்கு வரலாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதேயாகும்.பொள்ளாச்சிநம் முன்னோர்களின் வரலாறு, வாழ்க்கை முறை, ஆகியற்றிக்கு ஒரே ஆதாரமாக வரலாற்று சின்னங்கள் உள்ளன. வாய்மொழி வரலாறு அழிந்துவிடக்கூடும்; மாற்றப்படும் என்பதால் முன்யோசனையோடு ஆதாரங்களை ஏற்படுத்திச்சென்றனர் முன்னோர்கள். அப்படி உருவாக்கப்பட்ட பதிவுகளில் இருந்துதான் முன்னோர்கள் வரலாற்றை நாம் தெரிந்து கொள்கிறோம். வேட்டைக்கும், போருக்கும் பயன்படுத்திய ஆயுதங்கள், நாடோடிப் பாடல்கள் ஆகியவற்றிலிருந்து தான் நம் முன்னோர்களின் வீரத்தையும், தியாகத்தையும் அறிந்து கொள்கிறோம். இப்படியான பல்வேறு வரலாற்று சின்னங்களை கொண்டு தான் நம் சமூகம் கடந்து வந்த பாதைகளை அறிந்து கொள்கிறோம். பல பல அறிஞர்கள் அரும்பாடுபட்டு, எங்கோ செல்லரித்துக் கிடந்த ஓலைச்சுவடியை கண்டுபிடித்து படியெடுத்திராவிட்டால், இன்று உலகமே கொண்டாடும் திருக்குறள் நமக்கு கிடைத்திருக்காது. இப்படியான எண்ணிலடங்கா பொக்கிஷங்களை நம் அலட்சிய போக்கால் இழந்துவிட்டோம் என்பதே உண்மை. இன்று எங்கு, எத்தனை நடுகற்கள் துவைக்கும் கல்லாகவும், படிக்கல்லாகவும் கிடக்கின்றனவோ... நம் பகுதிகளில் நாம் காணும் மூளியான சிற்பங்களும், "பெயின்ட் அடிக்கப்பட்டு சீரழிந்த பழங்கால கல்வெட்டுகளுமே நமது அலட்சியத்துக்கு சாட்சி.