அரசனுக்கும், வேம்பனுக்கும் டும் டும் டும்!
பல்லடம்: சுல்தான்பேட்டை ஒன்றியம், செஞ்சேரிமலையில் பட்டி விநாயகர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள அரச மரம் மற்றும் வேப்ப மரத்திற்கு நேற்று ஊர் பொதுமக்கள் சார்பில், மேளதாளம் முழங்க, சீர்வரிசையுடன் விமரிசையாக திருமணம் நடத்தப்பட்டது. முன்னதாக, கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜை, ஹோமம், வேள்வி நடத்தப்பட்டது. சம்முகுட்டி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள், அரச மரம், வேம்பு மரத்துக்கு வேதம் முழங்கி, திருமணம் செய்து வைத்தனர். சுந்தர சிவாச்சல குருக்கள் கூறுகையில், ""அரசு, வேம்பு மரங்கள் ஒரே இடத்தில் சேர்ந்து வளரும்போது, அதற்கு திருமணம் செய்து வைப்பது இந்து மதத்தின் மரபு. அரச மரம் சிவனின் வடிவம், வேம்பு பார்வதியின் வடிவம். அரச மரம், வேம்பு மரத்தின் கீழுள்ள விநாயகருக்கு 48 நாட்களுக்கு தினமும் ஒரு குடம் தண்ணீர் விட்டு மரங்களை 11 முறை சுற்றி வந்தால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வு சிறப்படையும். மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் கை கூடும். நாம் மட்டுமன்றி நம்மை சார்ந்தவர்களும் நலம் பெறுவர், என்றார்.எஸ்.குமாரபாளையம் ஊராட்சி தலைவர் முத்துமாணிக்கம், செஞ்சேரிபுத்தூர் ஊராட்சி தலைவி சசிகலா, மலைப்பாளையம் ஊராட்சி தலைவி மனோன்மணி, மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் செயல் அலுவலர் சித்ரா உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழக டிரைவர் மயில்சாமி செய்திருந்தார்.