உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தோடரின மக்களின் வில்-அம்பு சாஸ்திர நிகழ்ச்சி!

தோடரின மக்களின் வில்-அம்பு சாஸ்திர நிகழ்ச்சி!

ஊட்டி: ஊட்டி அருகே, கிளன்மார்கன் பகுதியில் உள்ள தார்நாடு மந்தில், தோடரின மக்களின் பாரம்பரிய நிகழ்ச்சியான "வில்-அம்பு (வளைகாப்பு) சாஸ்திர நிகழ்ச்சி நடந்தது.நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்களில், தோடரின மக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுகின்றனர்.

மாவட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மந்துகளில் (கிராமங்கள்) இந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின், வாழ்வில் முறை; தெய்வீக வழிபாடு மற்றும் இல்லற பந்த முறைகள், வேறு எந்த மக்களிடம் இல்லாத அளவுக்கு, தனித்துவம் வாய்ந்தவையாக கருத்தப்படுகிறது. இம்மக்களின் "வில்-அம்பு சாஸ்திரம் எனப்படும், வளைகாப்பு நிகழ்ச்சி, சர்வதேச அளவில் பிரபலமான ஒன்று. இதனை பார்ப்பதற்காகவே, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிக வருகின்றனர்.இந்நிலையில், ஊட்டி அருகேவுள்ள "கிளன்மார்கன் தார்நாடு மந்து பகுதியில், இரு ஜோடிகளுக்கான "வில்-அம்பு சாஸ்திரம் (வளைகாப்பு) நிகழ்ச்சி நடந்தது. இதற்கென,பல்வேறு மந்துகளில் இருந்தும் தோடரிட மக்கள், "தார்நாடு மந்து பகுதிக்கு வந்திருந்தனர்.

மதியம் துவங்கி, பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், தோடரின ஆண்களும், பெண்களும் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாலை 4:30 மணிக்கு, "சின்மிஸ்குட்டன்-மதினாசின் மற்றும் முத்தர்ஸ் குட்டன்-வினிதாசின் ஆகிய ஜோடிகளுக்கு, வில்-அம்பு சாஸ்திர நிகழ்ச்சி நடந்தது. தோடரினத்தை சேர்ந்த சத்தியராஜ் கூறுகையில் வில்-அம்பு சாஸ்திர நிகழ்ச்சியின் போது, நகா மரத்தில் விளக்கு வைக்கப்படும். அதனை வணங்கிய பின்பு, வில்-அம்பை எடுத்து வரும் தோடரின ஆண்மகன், பெண்ணின் தந்தையிடம் அனுமதி வாங்கி, அதனை பெண்ணிடம் கொடுப்பார். அதன்பின், அதனை வாங்கும் பெண்ணும், அந்த விளக்கு முன்பு நின்று, வணங்கி வழிபடுவார். இது தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாகும். இதன் பின்பு அனைவரும் நடனம், விருந்து என மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !