பூமிக்கு அடியில் கட்டடம்: செஞ்சி அருகே கண்டுபிடிப்பு!
செஞ்சி: செஞ்சி அருகே, ஏரியில் நடந்த, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலையின் போது, பூமிக்கு அடியில் கருங்கல் கட்டுமானம் இருப்பது தெரிய வந்தது. இங்கு, அகழ்வாய்வு நடத்த வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே, பொன்பத்தி கிராமத்தில்,31ம் தேதி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஏரியில் மண் எடுக்கும் பணி நடந்தது. அப்போது, ஊரை ஒட்டிய பகுதியில், கருங்கல் கட்டுமானம் தென்பட்டுள்ளது.பணியின் துவக்கத்தில் காணப்பட்ட செங்கல் கட்டுமானத்தை, அங்கு பணிபுரிந்த கிராம மக்கள் உடைத்து எடுத்து விட்டனர். அடுத்து,10 அடிக்கும் அதிகமாக கட்டுமானம் நீண்டதால், சந்தேகமடைந்து, கட்டுமானத்தை குலைக்காமல் மண்ணை மட்டும் எடுத்தனர். இரண்டு அடி அகலத்தில், 3 முதல், 7 அடி நீளம் வரையிலான பலகை கற்களை தரைத்தளம் போல் பதித்துள்ளனர். இதையொட்டி, கருங்கல் மற்றும் செங்கல் கட்டுமானம் உள்ளது. இந்த இடத்தில்,மண்டபம், கோவில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் கிராம மக்களிடையே எழுந்துள்ளது. இங்கு, தொல்பொருள் ஆய்வு துறையினர், அகழ்வாய்வு நடத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உறை கிணறு:கடந்த ஆண்டு, இந்த கிராமத்தை அடுத்துள்ள, ஆற்றங்கரை பகுதியில், 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய, சுடுமண் உறை கிணறு இருந்ததை, ஆய்வாளர் கண்டு பிடித்தார். இதை, அரசு கண்டு கொள்ளாததால், நில உரிமை யாளர், சில மாதங்களில், மண்ணை கொட்டி மூடிவிட்டார்.