திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது!
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது.கோயிலில், காலை 8.30 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர் முன்பு பூஜைகள் முடிந்து, மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு பூஜைகள் முடிந்து, யாகசாலை பூஜைகள் நடந்தன.
சுவாமிக்கு காப்பு கட்டுதல்: முதலில் ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும், அடுத்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் காப்பு கட்டப்பட்டது. திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டிய பின், பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. துணை கமிஷனர் பச்சையப்பன் கலந்து கொண்டார்.
பக்தர்கள் தவிப்பு: காப்பு கட்டுவதற்காக கம்பத்தடி மண்டபத்தில் பக்தர்கள் வரிசையாக செல்ல இரும்பு கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால், தடுப்பு கம்பிகள் வெளிப்பகுதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், கூட்ட நெரிசலில் பலர் மயக்கமடைந்தனர். ஒரு எஸ்.ஐ. இரு போலீசார் மட்டுமே இருந்தனர். பெண் போலீசார் இல்லை. போலீஸ் - நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சிலர், ஒழுங்குப்படுத்தும் பணியின்போது பலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சஷ்டி விரதமிருக்கும் பெண் பக்தர்கள் ஐந்து நாட்களும் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். அதனால் இரவு நேரங்களில் கூடுதலாக பெண் போலீசார் நியமிக்கப்படுவதுடன், பகலிலும் போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்க பாலகிருஷ்ணன் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.