மதுரை இஸ்கான் கோயிலில் மலர்மயில் தீப அலங்காரத்தில் ராதா மதுராபதி!
மதுரை: மணிநகரம் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் (நவ.2) தீபாவளியன்று மலர்மயில் தீப அலங்காரத்தில் ராதா மதுராபதி எழுந்தருளி பக்தர்களுக்கு திருவருள் புரிந்தனர். மதுரை மணிநகரத்திலுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் கடந்த அக்.18 முதல் ஒரு மாத கால தாமோதர தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த தாமோதர தீபத் திருவிழாவை முன்னிட்டு கிருஷ்ணரின் சன்னதி முழுவதும் வண்ண மலர்களாலும், நூற்றுக்கணக்கான தீபங்களால் தினமும் அலங்கரிக்கப்படுகிறது. கிருஷ்ணரின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தும் தினமும் ஒரு விசேஷ அலங்காரமும் நடைபெறுகிறது. தீபாவளி மற்றும் லட்சுமி பூஜையை முன்னிட்டு நவ.2ல் ராதா மதுராபதி மலர் மயில் தீப அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு திருவருள் புரிந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்று கிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டி மகிழ்ந்தனர். இன்று (நவ.4)கோவர்த்தன பூஜையை முன்னிட்டு கோவர்த்தன கிரி தீப அலங்காரமும் நடைபெறுகிறது. மேலும் இத்தீபத்திருவிழா நவ.17 வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.