சென்னிமலையில் கந்த சஷ்டி விழா துவக்கம்: பக்தர்கள் சுவாமி தரிசனம்
சென்னிமலை: சென்னிமலை மலை மீது கோவில் கொண்டுள்ள சுப்பிரமணியஸ்வாமி கோவிலில், கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார திருவிழா நேற்று துவங்கியது. கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான, சென்னிமலை மலை மீது அமைந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமிக்கு கந்தர் சஷ்டி, விழா வெகுசிறப்பாக துவங்கியது. நேற்று காலை துவங்கிய விழாவில், காலை, 8 மணிக்கு சென்னிமலை கிழக்கு ரதவீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து, முருகன், வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு துவங்கி, மலை கோவிலை அடைந்தது. காலை, 9.30 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. 10.30 மணிக்கு மகா பூர்ணாகுதி, 11 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் அபிஷேகமும், 12 மணிக்கு மகாதீபாராதனையும், 12.30 மணிக்கு வள்ளி தெய்வானைக்கு அபிஷேகமும் நடந்தது ஏராளமான பக்தர்கள் விரதத்துடன் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். பின் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அபிஷேகம் மற்றும் அன்னதானம் வரும், 8ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு தினமும் இதே நேரத்தில் நடக்கும். 8ம் தேதி இரவு உற்சவர் மலை அடிவாரத்தில் எழுந்தருளி இரவு, 8 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை மற்றும் சிறப்பு மேளதாளத்துடன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நிகழ்ச்சி, சென்னிமலை நான்கு ரத வீதிகளில் நடக்கிறது. இதில் மேற்கு ரதவீதியில் ஜெகமகாசூரனையும், வடக்கு ரதவீதியில் சிங்கமுகசூரனையும், கிழக்கு ரதவீதியில் வானுகோபனையும், தெற்கு வீதியில் சூரபத்மனையும் முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி முடிந்து, முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் எழுந்தருள்வார். அதை தொடர்ந்து, 9ம் தேதி காலை, 11 மணிக்கு முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்யும் திருமண விழாவும், தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை செங்குந்தர் கைக்கோள முதலியார் ஸ்ரீகந்த சஷ்டி விழா கமிட்டியார் மற்றும் கோவில் செயல் அலுவலர் பசவராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.