சத் பூஜைக்காக பீகார் மக்கள் புறப்பாடு!
பாட்னா: சூரிய வழிபாட்டை வலியுறுத்தும், சத் பண்டிகை, பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் பல பகுதிகளிலும் பணிபுரியும், பீகார் மாநில மக்கள், சத் பண்டிகைக்காக, சொந்த ஊர் புறப்பட்டுள்ளனர். இதனால், வட மாநிலங்கள் செல்லும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. டில்லி, மும்பை, கோல்கட்டா போன்ற மாநிலங்களில், பீகார் மற்றும் உ.பி.,யைச் சேர்ந்த மக்கள் பெருமளவு பணிபுரிவதால், இந்த மாநகர ரயில் நிலையங்களில், அதிக கூட்டம் காணப்படுகிறது.டில்லியில் இருந்து பீகாருக்கு இயக்கப்படும், சம்பூர்ண கிராந்தி எக்ஸ்பிரஸ், மகத் எக்ஸ்பிரஸ், ஷ்ரம்ஜீவ் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்ததால், ரயில் கழிவறைகளிலும் மக்கள் தொத்திக் கொண்டு பயணித்தனர்.நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பீகார் மாநில மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக, கிழக்கு மத்திய ரயில்வேயின் சார்பில், டில்லி, மும்பை, ஆமதாபாத், முசாபர்நகர், ஜபல்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, 32 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பீகாரில், சத் பண்டிகை கொண்டாடப்படும், பொது இடங்களில், இலவச மின் சப்ளை வழங்க, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் சனிக்கிழமை வரை வழங்ப்படும் மின்சாரத்திற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என, பீகார் மாநில மின்வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து, கங்கை நதிக்கரை மற்றும் மாநிலத்தின் முக்கிய வீதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.கங்கை மற்றும் பிற புண்ணிய நதிகளில் இறங்கி, புனித நீராட, சூரியனை வழிபட்டு, தங்கள் குடும்ப நன்மைக்காக இறைவனை வேண்டுவது தான், சத் பூஜை. இந்த பூஜைக்குப் பிறகு தான், அப்பகுதி மக்கள், தீபாவளி போல, உண்டு, புத்தாடை அணிந்து மகிழ்கின்றனர்.