அரோகரா கோஷத்துடன் ... திருவண்ணாமலை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை சிவாச்சாரியார்கள் கோவில் 62 அடி உயரம் உள்ள தங்க கொடிமரத்தின் முன் வேதமந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமறை இசைக்க, மேளதாளம் முழங்க, பக்தர்கள் பக்தி கோஷமிட காலை 6.20 மணியளவில் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து, 10 நாட்களுக்கு காலை, இரவு நேரங்களில், சாமி வீதி உலா நடக்கும். வரும், 14ம் தேதி, தேரோட்டமும், 17ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை மீது, மகா தீபமும் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவை ஒட்டி, அருணாச்சலேஸ்வரர் கோவில் வளாகம், ஒன்பது கோபுரங்கள் மற்றும் சந்நிதிகள், தங்க கொடிமரம், தல விருட்சமான மகிழ மரம் ஆகியவை வண்ண மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.