உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தோடர் கோவில்களுக்கு பாரம்பரிய அந்தஸ்து பெற முயற்சி!

தோடர் கோவில்களுக்கு பாரம்பரிய அந்தஸ்து பெற முயற்சி!

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள, மிகவும் பழமை வாய்ந்த தோடரின கோவில்களை, இன்டாக் அமைப்பின் சார்பில், பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தோடர் இன மக்கள் பரவலாக வசிக்கின்றனர். உணவு, உடை, இருப்பிடம் மற்றும் கலாசாரத்தில், முன்னோரை இன்னும் பின்பற்றி வருகின்றனர். தோடர் இன பெண்கள், "எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்வதில் வல்லவர்கள். மிக நுணுக்கமாக, நேர்த்தியான முறையில் இந்த எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன், தோடரின மக்களின் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளுக்கு, உலகளாவிய அங்கீகாரம் வழங்கும் வகையில், "புவியியல் குறியீடு வழங்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, நீலகிரி தோடர் இன மக்கள், தங்கள் கோவில்களுக்கு பாரம்பரிய அந்தஸ்து பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். "மந்து எனப்படும், தோடரின மக்கள் வாழும் இடங்களில், அவர்களின் வித்தியாசமான கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன; கோவில்களில் தீபம் ஏற்றி, அதை கடவுளாக நினைத்து வழிபடுவது தான், தோடரின மக்களின் பாரம்பரியம்; எருமை வளர்ப்பதை குலத் தொழிலாக கொண்டுள்ள தோடரின மக்கள், எருமை பாலை எடுத்து, அதில் இருந்து சுத்தமான நெய் தயாரித்து, அதை கோவிலில் உள்ள விளக்கில் ஏற்றி வழிபடுகின்றனர். இவ்வாறு, இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்கின்றனர்.

நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க நிர்வாகி ஆல்வாஸ் கூறுகையில் நீலகிரியில் தோடரின மக்கள், பல நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கான ஆதாரம் உள்ளது. அவர்கள் வாழ்விடங்களில் உள்ள கோவில்கள், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. "மனிதனின் பழமை செய்திகள் குறித்த அறிவியல் ஆய்வை மேற்கொள்ளும் துறை (இன்டாக்) மூலம், தோடர் இன கோவில்களுக்கு பாரம்பரிய அந்தஸ்து பெற முயற்சி செய்து வருகிறோம். கோவில்களின் வரலாறு மற்றும் விளக்கங்களை அந்த அமைப்பு கேட்டுள்ளது. இதனால் அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !