மருதமலையில் திருக்கல்யாணம்: சுப்ரமணியர் திருவீதி உலா!
பேரூர்: மருதமலை சுப்ரமணியசவாமி கோவிலில், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியசவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.முருகனின் ஏழாம்படை வீடாக போற்றப்படுவது மருதமலை சுப்ரமணியசாமி கோவில். மருதமலை சுப்ரமணியசாமி கோவிலில், கந்தசஷ்டி விழா 4ம் தேதி துவங்கியது. மறுநாள் (5ம்தேதி) முதல் எட்டாம் தேதி வரை, மொத்தம் நான்கு நாட்களுக்கு காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடந்தது. இதையடுத்து, மறுநாள் அதிகாலை நடை திறக்கப்பட்டு, கோபூஜை, உஷகாலபூஜை, தொடர்ந்து 8.00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து, காலை 9.00 மணிக்கு, வள்ளி, தெய்வானை, சுப்ரமணியசவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம், விநாயகர் பூஜையுடன் துவங்கியது. பூஜையில் 11 கலசங்கள் வைத்து, வள்ளி,தெய்வானை, சுப்ரமணியரை கலசத்தில் எழுந்தருளச்செய்தனர். தொடர்ந்து, வள்ளி, தெய்வானையை முருக பெருமானுக்கு தாரைவார்த்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பிறகு, வள்ளி, தெய்வானைக்கு திருமாங்கல்யதாரணம் நடந்தது. தொடர்ந்து, ஓதுவாமூர்த்திகள், திருப்பொற்சுண்ணப்பாடல் பாடி, உரலில் மஞ்சள் இடித்து, வள்ளி, தெய்வானை சமேத, சுப்ரமணியசவாமிக்கு சார்த்தப்பட்டது. தொடர்ந்து பூர்ணாகுதி, சோடசஉபசார தீபாராதனைகள், உபசார வழிபாடுகள், திருமுறை விண்ணப்பங்கள் நடத்தப்பட்டு, வள்ளி, தெய்வானைக்கு மாலைமாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் வள்ளி, தெய்வானை உடனமர் சுப்ரமணியசவாமி மீது மலர்களை தூவி, அரோகரா கோஷம் முழங்க பயபக்தியுடன் வழிபட்டனர். தொடர்ந்து, பெண்களுக்கு மாங்கல்யசரடு, பிரசாதம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. . இறுதியில், மூவரும் வெள்ளையானை வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.