தீபத்திருநாள் நாடெங்கும் வரும் 17ம் தேதி மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது
ADDED :4349 days ago
தூத்துக்குடி: தீபங்களை வணங்கும் தீபத்திருநாள் நாடெங்கும் வரும் 17ம் தேதி மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஐதீக முறைப்படி கார்த்திகை திருநாளில் தீபம் ஏற்றும் அகல் விளக்குகள் தற்போதே நகர பகுதிகளில் விற்பனைக்கு குவிந்துள்ளது.கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வரும் விழா. தீபம் ஏற்றி வழிபடும் கார்த்திகை திருநாளில் ஜோதி வடிவில் சிவபெருமானை காணலாம் என ஐதீகம் கூறுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் இறைவனை கோயில்களில் ஜோதி வடிவமாக காணும் விதத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது பனை ஓலைகளை வெட்டி ஏராளமானோர் திரண்டு திருவிழா போன்று கொழுத்தி மகிழ்வர். இந்த ஆண்டு வரும் 17ம் தேதி இந்த விழா நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக, தீப சுடர் ஏந்தும் கிளியாஞ்சட்டிகள் கடந்த காலங்களில் அனைவரின் வீடுகளிலும் காணப்படும். ஐதீக முறைப்படி இந்த மண் சட்டிகளில் தான் எண்ணை ஊற்றி திரி வைத்து வீடுகளுக்கு முன்பு வைத்து இறைவனை வழிபடுவர். மெழுகுவர்த்தி வருகையால் இந்த மண்சட்டிகள் இருந்த இடம் தெரியாமல் போனது. தற்போது ஐதீக முறைப்படி மண் சட்டிகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதால், இதற்கு மீண்டும் மவுசு ஏற்பட்டுள்ளது. கார்த்திகை அகல் விளக்குகள் பல்வேறு வடிவங்களான ஒன்று முதல் 9 அடுக்குகள் கொண்ட விளக்குகளும், யானை, குதிரை வடிவில் விளக்குகளும், சிறுதிரி விளக்குகளும் கிராமம் மற்றும் நகர பகுதிகளில் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது.