விருத்தகிரீஸ்வரர் கோவில் மேற்கு கோபுர திருப்பணி துவங்கியது!
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மேற்கு கோபுர திருப்பணி பாலாலய யாகத்துடன் நேற்று துவங்கியது. விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகளுக்கு முன், விபச்சித்தி முனிவர் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து, திருப்பணியை துவங்கியது விருத்தகிரீஸ்வரர் கோவில். இக்கோவில் ஐந்து கோபுரங்கள், ஐந்து பிரகாரங்கள், ஐந்து நந்திகள், ஐந்து கொடி மரங்கள் என்ற சிறப்பு பெற்றது. கோவில் கோபுரங்களில் அரசங் கன்றுகள், செடி, கொடிகள் வளர்ந்து, விரிசல் ஏற்பட்டன. மேற்கு கோபுரத்திலிருந்த அழகிய பொம்மைகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் கோபுரத்திற்கு ஆபத்து என்பதை சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் கடந்தாண்டு ஏப்ரல் 24ம் தேதி செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து ஈரோடு, சென்னை, கள்ளக்குறிச்சி பகுதி சிவனடியார்கள், இலைவழியாக சென்று செடிகளை கருகிவிடும் ரசாயண மருந்துகளை தெளித்தனர். போதிய பலனளிக்கவில்லை. பழமை வாய்ந்த கோபுரங்களை பாதுகாக்க, கோவில் நிர்வாகம் மேற்கு கோபுரத்தை புனரமைக்கும் திருப்பணியை நேற்று துவக்கியது. அதையொட்டி காலை 9:00 - 10:30 மணியளவில் பெரியநாயகர், பெரியநாயகி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், பாலாலய யாகம் நடந்தது. கோவில் செயல் அலுவலர் பாலசுப்ரமணியராஜன் கூறுகையில், மேற்கு கோபுரத்தில் செடி, கொடிகள் முளைந்து, பொம்மைகள் பெயர்ந்து விழுகின்றன. கோபுரத்தின் உச்சி பலவீனமடைந்துள்ளது. அதனால், கோவில் நிதி 10 லட்சம் ரூபாய், இந்து சமய அறநிலைத்துறை நிதி 8.5 லட்சம் ரூபாய் என 18.5 லட்சம் செலவில் புனரமைப்பு பணி பாலாலயா யாகத்துடன் துவக்கியுள்ளோம். மேலும், அனைத்து கோபுரங்களையும் புதுப்பிக்க 14வது நிதி ஆணைத்திடம் 2 கோடி ரூபாய் நிதி கோரியுள்ளோம். கிடைத்தவுடன் திருப்பணி செய்து, குடமுழக்கு நடத்தப்படும் என்றார்.