முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் தேர்திருவிழா
சென்னிமலை: சென்னிமலை அடுத்துள்ள முருங்கத்தொழுவு மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடந்தது. சென்னிமலையில் இருந்து அரச்சலூர் மெயின் ரோட்டில் உள்ள முருங்கத்தொழுவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்திருவிழா ஆண்டுதோறும், ஐப்பசி மாதம் நடக்கும். இந்த ஆண்டு பொங்கல் விழா, அக்டோபர், 30ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நவம்பர், 6ல் கம்பம் நடுதல் நடந்தது. தலவுமலை, வடுகபாளையம், வாய்க்கால் மேடு, அம்மன் கோவில்புதூர், ஊர் பொதுமக்கள் காவடி சுமந்து, மாரியம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் காலை, மஹா அபிஷேகம் தீபாராதனையும், அதை தொடர்ந்து தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு, 14 ஊர்களை சேர்ந்த மக்கள், பொங்கல் வைத்து மாரியம்மனுக்கு கோழி, ஆடு பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.தொடர்ந்து, தேர்த்திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர். உற்சவ அம்மைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று வெள்ளிக்கிழமை மதியம் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், 15 நாள் தேர்திருவிழா நிறைவடைந்தது.