உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை தீப திருவிழாவில் குலுங்கியது குன்றம்!

கார்த்திகை தீப திருவிழாவில் குலுங்கியது குன்றம்!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, எப்போதும் இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. நேற்று, கார்த்திகை மாத பிறப்பு, கார்த்திகை தீபம், பவுர்ணமி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்பதே இதற்கு காரணம். நேற்று முன்தினம் இரவே பக்தர்கள் திருப்பரங்குன்றம் வந்து தங்கினர். நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்ய, ஒருநபர் செல்லும் வகையில் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சாதாரண தரிசன பக்தர்களுக்கு ஒரு பாதையும், சிறப்பு கட்டண தரிசன பக்தர்களுக்கு மற்றொரு பாதையும் அமைக்கப்பட்டிருந்தது. வி.ஐ.பி.க்கள் கட்டண தரிசன பாதையில் அனுப்பப்பட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், சாதராண தரிசனத்திற்கு வந்தவர்கள் கோயிலுக்கு வெளியில் ஒன்றரை கி.மீ., தூரத்திற்கு வரிசையில் நின்றனர். சிறப்பு கட்டண தரிசன பக்தர்கள் 2 மணிநேரமும், கட்டணமில்லா தரிசன பக்தர்கள் 3 மணிநேரமும் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பலர் கோயிலின் மேற்கு பகுதி கம்பி கதவில் மாலையை போட்டு, தரையில் தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து சுவாமி கும்பிட்டும் சென்றனர்.நேற்று மாலை மலைமேல் உள்ள உச்சிப்பிள்ளையார் மண்டபத்தின் மேல், நான்கரை அடிஉயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில், 150 கிலோ நெய், 100 மீட்டர் காடா துணியினால் தயாரான திரி வைக்து, அதன் நுனியில் 5 கிலோ சூடம் வைத்து மகாதீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றுவதற்காக திருவண்ணாமலையிலிருந்து தீப நிபுணர்கள் வந்திருந்தனர்.

பட்டாபிஷேகம்: தீபம் ஏற்றி முடிந்ததும், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. பின், தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி, 16கால் மண்டபம் முன்பு எழுந்தருளினார். அங்கு சொக்கப்பான் தீபக் காட்சி முடிந்து சுவாமி திருவீதி உலாநிகழ்ச்சியில் அருள்பாலித்தார். இன்று (நவ., 18) தேரோட்டமும் நாளை தீர்த்த உற்சவமும் நடக்கிறது.

அழகர்கோவில்:அழகர்கோவில், சோலைமலை முருகன் கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இரவு 3 மணிக்கு மூலவர் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அன்னாபிஷேகம் நடந்தது. பின், புஷ்ப அலங்காரம், தீப ஆராதனைகள் நடந்தன. பகல் 3 மணிக்கு 18 வகை அபிஷேகம் முடிந்து, தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 5 மணிக்கு சப்பரத்தில் எழுந்தருளி கோயிலை சுவாமி வலம் வந்தார். இரவு சொக்கப்பனையும், கோயிலில் கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்பட்டது. ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, துணை கமிஷனர் வரதராஜன் தலைமையில், பேஸ்கார் தேவராஜ் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !