அரோகரா கோஷத்துடன் பழநியில் ஒளிவீசிய கார்த்திகை தீபம்!
பழநி: பழநி மலைக்கோயிலில், "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற சரண கோஷத்துடன், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பழநியில், நவ., 11 ல், காப்புக்கட்டுதலுடன் துவங்கிய கார்த்திகை தீப திருவிழாவில், நேற்று மதியம் சண்முகார்ச்சனையும், சண்முகர் தீபாராதனையும், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடந்தது. தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரசுவாமி, தீப ஸ்தம்பம் அருகே உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார். மூலவர் ஞானதண்டாயுதபாணி சன்னதியில் இருந்து பரணி தீபம் எடுத்து வரப்பட்டு, உட்பிரகாரத்தின் 4 மூலைகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின், சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, பழநியாண்டவருக்கு அரோகரா என சரணகோஷம் எழுப்பினர். பக்தர்களுக்கு கார்த்திகை பொறி, அப்பம் நைவேத்திய பிரசாதம் வழங்கப்பட்டது. திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. மலைகோயிலுக்கு செல்லும் படி வழி, திருஆவினன்குடிகோயில் போன்ற இடங்களில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.