உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவிலில் கார்த்திகை தீபம் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

திருத்தணி கோவிலில் கார்த்திகை தீபம் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று கார்த்திகை கிருத்திகை மற்றும் தீபத்திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி, மூலவருக்கு அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, மலைக்கோவில் எதிரில் உள்ள பச்சரிசி மலையில், 120 கிலோ நெய், 3 அடி அகலம் (கனம்), 9 அடி நீளம் உள்ள திரியால் நெய் தீபம் ஏற்பட்டது. அதே நேரத்தில், மலைக்கோவில் வளாகத்தில், சொக்கபனை மரத்தில் தீபம் ஏற்றி சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று கார்த்திகை கிருத்திகை மற்றும் தீபம் முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், மூலவரை, நான்கு மணி நேரம் காத்திருந்து தரிசித்தனர். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி நேற்று அதிகாலை, 4:00 மணி முதல் பக்தர்கள் மலைவலம் வந்து வழிபட்டனர். மாலை, 4:00 மணிக்கு, வேதகிரீஸ்வரர் மலைக் கோவில் உச்சியில், அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் அகண்டத்தில் ஏற்றப்பட்ட தீபத்தை தரிசித்து வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர். இரவு, பஞ்சமூர்த்திகளான விநாயகர், ஈஸ்வரர், அம்பாள், முருகர், சண்டிகேஸவரர் ஆகிய சுவாமிகள் வீதி உலா வந்து அருள் பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !