சபரிமலையில் பிரசாதம் பெற புதிய நடைமுறை!
சபரிமலை: சபரிமலை ஸ்ரீகோயிலில் இருந்து நேரடியாக பிரசாதம் கொடுக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு "மண்டல காலத்தில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீகோயிலில் முன்புறம் செல்லும் வி.ஐ.பி., பக்தர்களுக்கு, இலையில் திருநீறு, சந்தனம், பூ உள்ளிட்ட பிரசாதம் கொடுப்பது வழக்கம். நீண்ட நேரம் காத்திருந்து வரும் பக்தர்களுக்கு, இப்பிரசாதம் கிடைப்பதில்லை; இதைப்பெற, தந்திரி அல்லது மேல்சாந்தியின் அறைக்கு செல்ல வேண்டும். இதுபோல், இருநிலை இருக்கக்கூடாது என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு எடுத்தது. கேரளாவில் அனைத்து கோயில்களிலும், நேரடியாக பிரசாதம் கொடுக்க தடை விதித்து, தேவசம்போர்டு கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு, சபரிமலையிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. "மண்டல காலம் தொடங்கியது முதல், ஸ்ரீகோயிலில் இருந்து பிரசாதம் கொடுக்கப்படவில்லை. தந்திரி, மேல்சாந்தியை சந்தித்து, பக்தர்கள் பிரசாதம் வாங்கி செல்கின்றனர். குருவாயூர் கோயிலில், பல ஆண்டுகளாக, ஸ்ரீகோயிலில் இருந்து பிரசாதம் கொடுக்கப்படுவதில்லை.
நேற்றும் மழை: சபரிமலை: சபரிமலை, பம்பையில் நேற்று முன்தினம் இரவு, பலத்த மழை பெய்தது. இதனால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். பொதுவாக, மதியத்துக்கு பின், மலையேறும் பக்தர்கள், இரவு சன்னிதானத்தில் தங்குவர்; அடுத்த நாள் காலையில், நெய்யபிஷேகம் முடித்த பிறகே, மலை இறங்குவர். நேற்று முன்தினம் பெய்த மழையால், பக்தர்கள் தங்கும் இடங்கள் சகதியாக மாறின. கட்டடங்களின் வராண்டாவிலும், "ஷெட் களிலும் தங்கி, நேற்று காலையில் மலை இறங்கினர். நேற்றும் வெயில் இல்லை. மதியத்துக்கு பின், சாரல் மழை பெய்தது. கடுமையான குளிர் நிலவியது.